தசகம் 6
வ்யாஸ நாரத
ஸமாகமம்
1. த்வதிச்சயா தேவீ! புலஸ்த்யவாசா
பராசராத் விஷ்ணு, புராணாகர்த்துஹு
முனேர் ஹரிர் லோக,ஹிதாய தீபாத்
யதா ப்ரதீபோSஜனி, க்ருஷ்ண நாமா
புராணங்களில் மிகப் பழமையானது விஷ்ணு புராணம். புலஸ்த்ய மஹரிஷி எழுதும்படிச் சொன்னதால் பராசரர் அதை எழுதினார். இது தேவியின் ஆசை தான். அவர் மனதில் இதை எழுதும்படி தோன்றச் செய்தவள் அன்னை தானே. ஒரு நாள் பராசரர் தீர்த்த யாத்திரைச் செய்யும் பொழுது காளிந்தி என்னும் யமுனா நதிக்கரைக்கு வருகிறார். நதியைக் கடப்பதற்கு ஓடக்காரன் தன் மகளான மச்சகந்தியை ஓடத்தில் அவரை அக்கரையில் சேர்க்கும்படிச் சொல்கிறான். அவள் பராசரருடன் நதியில் செல்லும் போது தோணி செல்லும் ரம்யமான சூழ்நிலையில், அவளது அங்க லாவண்யங்களைக் கண்டு விதியின் காரணமாக காம இச்சைக் கொள்கிறார் பராசரர். ஆனால் அவளோ, ஐயா! நல்ல குலத்தில் பிறந்தவரும், ஆசாரசீலரும், ஞானவைராக்யமும் உடைய நீர் என் அருகில் வரலாமா? என் உடலில் வீசும் மச்ச நாற்றம் உமக்குத் தெரியவில்லையா? நாம் இருவரும் ஒத்த ஆசாரம் உள்ளவர்கள் அல்லவே? நீர் என்கையைப் பிடிப்பது எனக்கு அருவருப்பாக இருக்கிறது. உம்மை ஓடத்திலிருந்து தள்ளிவிட்டால் என்ன செய்வீர்? பயப்படாதீர்! நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றாள். அவள் அறிவினைக் கண்டு மகிழ்ந்த அவர் மேலும் இச்சை கொண்டார். அவள் கையை பிடித்தபடியே கரையை அடைந்ததும்
"உன் மீது மச்ச வாடை அடிக்கிறது என்றாயே. அதை இப்பொழுதே மாற்றுகிறேன்" என்று அவளிடம் சுகந்த பரிமள நறுமணம் வீசும்படிச் செய்தார். என் மனதில் காம இச்சை தோன்றியதற்கு தேவியின் இச்சைதான் காரணம். இந்த உலகத்தில் விஷ்ணு அம்சமான சத் புத்திரன் ஜனிக்க வேண்டிய நேரம். நீ ஒன்றும் கவலைப்படாதே! என்று சொன்னார். அவளை “சத்யவதீ” என்றும் அழைத்து இனி நீ எனக்கு ஒத்தவள் தானே என்றார்? பராசரரின் சரஸ மொழிகளைக் கேட்டு, நான் சம்மதித்தாலும் இப்பொழுது பகல் நேரம் அல்லவா? மனிதர்களான நமக்கு இது தகுமா என்றாள். உடனே அவர் தன் தவ வலிமையால் பகலை இரவாக்கினார். அப்பொழுது சத்யவதீ ஐயா! நீர் என்னைப் புணர்ந்த பின் கர்ப்பவதி ஆக்கி விட்டுச் சென்ற பின் நான் பிதாவையும்
உம்மையும் இழந்து பிறர் கேலிக்கு ஆளாவேனே என்றாள். சத்யவதீ! நான் சென்ற பின் நீ மீண்டும் கன்னி ஆவாய். பரிமள காந்தியுடன் கற்பிற் சிறந்தவள் என போற்றப் படுவாய். நீ விரும்பியவன் உனக்குக் கணவனாவான். இப்பொழுது என்னால் உண்டாகும் புத்திரன் விஷ்ணு அம்சம் நிறைந்தவனாக, மிகுந்த ஞானம் உடையவனாக, மூஉலகமும் போற்றும் பிரசித்தி உடையவனாக இருப்பான் என்றார்.
சத்யவதீ! நான் ஊர்வசீ ரம்பா போன்ற எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் உன் வயப்பட்டது விதியே என்று சொல்லி அவளோடு கூடி பின் யமுனையில் ஸ்நானம் செய்து ஆரண்யம் சென்றார். சத்யவதீ இரண்டாவது மன்மதனோ என்று சொல்லும்படியான ஒரு மகனைப் பெற்றாள். அவர் கிருஷ்ண த்வைபாயனர் எனப் பெயரிடப்பட்டார். தபோ வலிமையால் பிறந்தவராதலால் பிறந்தவுடன் தாயைப் பிரிந்து நீ நினைக்கும் போது வருவேன் என்று சொல்லி தவம் செய்ய காட்டிற்குச் சென்றார்.
2. வேதம் சதுர்தா விததத், ஸ க்ருஷ்ண-
த்வைபாயனோ வ்யாஸ, இதி ப்ரஸித்தஹ
வேதாந்த ஸூத்ராணி, புராணஜாலம்
மஹேதிஹாஸம் ச, மஹாம்ச்சகார
கிருஷ்ணாவதாரம் முடியும் நேரத்தில் த்வாபர யுக முடிவில் வ்யாஸர் கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயரில் தோன்றினார். வரப்போகிற கலியின் கொடுமையை எண்ணி அதுவரை ஒன்றாக இருந்த வேதத்தை 4 வேதங்களாகப் பிரித்தார். வேதத்தை வரையரை செய்ததால் வேத வ்யாஸர் எனப் பெயர் பெற்றார். அதை சுகர் போன்ற மஹரிஷிகளுக்கு உபதேசம் செய்தார். ஒவ்வொரு த்வாபர யுகத்திலும் இந்த வ்யாஸர் பிறக்கிறார். இவர் 28 ஆவது வ்யாஸராவார். 29
ஆவது வ்யாஸராக அஸ்வத்தாமா பிறக்கிறார்.
3. தப: ப்ரவ்ருத: களவிங்கபோதம்
மாத்ரா ஸ ஸம்லாளி,தமாச்ரமாந்தே
பச்யன்னதந்யாம், அனபத்யதாம் ஸ்வாம்
ஸபுத்ரபாக்யாதி,சயம் ச தத்யௌ
ஒரு சமயம் வ்யாஸர் சரஸ்வதி நதிக்கரையில் ஆச்ரமத்தில் இருக்கும் போது ஆண் பெண் ஆகிய இரு ஊர்க்குருவிகளின் லீலா வினோதத்தையும், தன் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகளிடம் காட்டும் பரிவையும் பார்த்தார். வளர்ந்த பிறகு தாய் தந்தையரை அறியமுடியாத இப்பறவைகளுக்கு இத்தனை பரிவு என்றால், மனிதருக்கு புத்திரர்களிடம் வாஞ்சை இருப்பதில் ஆச்சர்யமென்ன? நூல்களில் புத்திர சுகமே உயர்ந்தது என்றும், புத்திரன் இல்லாதவருக்கு சுவர்க்கம் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று அது ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது. வேத வாக்யமும் நிரூபணமாகிறது. இதை நினைத்துத் தனக்குப் புத்திரன் இல்லையே என வருத்தப்படுகிறார்.
4. ஸத்புத்ரலாபாய, தபச்சிகீர்ஷு
ஸ்தீவ்ரம் மஹாமேருஸமீவமேத்ய
‘ஆராதனீய:க' இதி க்ஷணம ஸ:
சிந்தாதுரோ லோக,குரு: ஸ்திதோSபூத்
புத்திரன் வேண்டும் என்ற ஆசை உடையவராக, மேருமலையில் தவம் புரியச் செல்கிறார். ஸத் புத்திரன் பெறுவதற்கு ருத்ரன், விஷ்ணு, ப்ரம்மன், இந்திரன், சூரியன், கணேசன், அக்னி, வருணன் என்று எந்த தெய்வத்தை உபாஸிக்கலாம் என்று யோசிக்கிறார்.
5. ஸ்ரீநாரதஸ்,தத்ர, ஸமாகதஸ்த்வத்
க்ருபா கடாக்ஷாங்,குரவன் மஹர்ஷிஹி
அர்க் யாதி: ஸம்பூஜித ஆஸனஸ்தோ
வ்யாஸேன ப்ருஷ்ட: பரஹஸன்னிவாSSஹ
அப்பொழுது தெய்வாதீனமாக நாரதர் அங்கு வருகிறார். வ்யாஸரும் மகிழ்ந்து அர்க்யம், பாத்யம், ஆஸனம் கொடுத்து க்ஷேம லாபங்களை விஜாரிக்கிறார். நாரதர் வ்யாசரின் கவலைக்குக் காரணம் கேட்கிறார். ஸ்த் புத்திரன் பெற எந்த தெய்வத்தை உபாஸிப்பது எனக் கேட்க, இதைக் கேட்டு நாரதருக்கு சிரிப்பு வருகிறதாம்.
6. கிம் சிந்தயா க்ருஷ்ண! பஜஸ்வ தேவீம்;
க்ருபாவதி வாஞ்சி,ததானதக்ஷா
அஹேதுரேஷா கலு ஸர்வஹேதுர்
நிரஸ்த ஸாம்யாதிசயா" நிரீஹா
ஹ்ருதய கமலத்தில் தேவியின் பாத கமலத்தை த்யானம் செய்யும். அவள் உன் விருப்பத்தை முடித்து வைப்பாள் என்று சொன்னார். (தன் தகப்பனாரான ப்ரம்மாவும் லோக ரட்க்ஷகரான மாஹாவிஷ்ணுவைத், த்யானம் செய்யும் போது யாரை த்யானிக்கிறீர்கள்? என்று கேட்டார். அவர் கூறின பதிலையே நாரதரும் இப்போது சொன்னார்).
7. ஸைஷா மஹா,சக்திரிதி ப்ரஸித்தா;
யதாஜ்ஞ்யா ப்ரம்ம,ரமேச ருத்ராஹா
ப்ரம்மாண்டஸர்க,ஸ்திதி ஸம்ஹ்ருதீச்ச
குர்வந்தி காலே, ந ச தே ஸ்வதந்த்ராஹா
இந்த ஜகமானது அன்னையிடமிருந்தே வந்தது. ப்ரம்மன், விஷ்ணு, ருத்ரன் ஆகியவர்களுக்கும் படைத்து, காத்து, அழிக்கும் சக்தியை தந்தவள். அனைத்து ஜீவன்களுக்கும் சக்தி தருவது அவள்தான். பேசுவது, கேட்பது, நடப்பது, ஏன் சாப்பிடுவது கூட அவளின் சக்திதான். அந்த சக்தி இல்லாவிட்டால் எதுவும் அசையாது. அவளே ஸமஷ்டி சக்தி, மஹாசக்தி ரூபிணீ.
8. யஸ்யாச்ச தே, சக்திபிரேவ ஸர்வ
கர்மாணி குர்வந்தி;, ஸுராஸீராத்யாஹா
மர்த்யா ம்ருகா: க்ருஷ்ண! பதத்ரிணச்ச
சக்தேர் விதேயா: க, இஹாவிதேயஹ?
அனைத்திற்கும் சக்தி தருபவள் அவளே. அவளின்றி அணுவும் அசையாது. மது கைடபர்களை வதைக்க யார் அனுக்ரஹித்தது? மஹாவிஷ்ணு மச்ச, வராக, வாமன அவதாரங்கள் எடுத்ததும் அவளின் விருப்பமே. விஷ்ணுவின் தலை விழுந்து, குதிரைத்தலை பெற்றதும் அவளின் அருளே. யாரும் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. அவளின் அருளே முக்கியம். இதில் உனக்குச் சந்தேகம் என்ன? என்று நாரதர் சொன்னார்.
9. ப்ரத்யக்ஷமுக்யைர், ந ச ஸா ப்ரமாணைர்
ஞேயா தபோபிஹி கடினைர் வ்ரதைச்ச
ந வேதசாஸ்த்ராத்,யயனேன சாபி;
பக்த்யைவ ஜானாதி, புமான் மஹேசீம்
தேவியைக் காண்பது எப்படி? எப்படி ப்ரத்யக்ஷமாவாள்? சப்தம் கேட்டு அன்னையைப் பார்க்க முடியாது. புலன்களாலும் அறிய முடியாது. இந்த்ரியங்களாலும் காண முடியாது. தீ இல்லாமல் புகையாது. புகை இருப்பதால் தீ கட்டாயம் இருக்கும். வேத சாஸ்த்ரங்கள் படித்தாலும், அறிந்தாலும் போதாது. தேவை உண்மை பக்தியே.
10. தாமேவ பக்த்யா, ஸததம் பஜஸ்வ
ஸர்வார்த்ததாம் க்ருஷ்ண! தவாஸ்து பத்ரம்;
இத்யூசுஷி, ப்ரம்மஸுதே கதே ஸ:
வ்யாஸஸ்தபோர்தம், கிரிமாருரோஹ
இவ்வாறு நாரதர் சொன்னதைக் கேட்ட சத்யவதி மகனான வ்யாஸர் உண்மையை உணர்ந்து அன்னையை த்யானம் செய்ய நிச்சலன புத்தியுடன் மேருமலை நோக்கிச் சென்றார்.
11. இஹாஸ்மி பர்யாகுல சித்தவ்ருத்திர்
குரும் ந பச்யாமி, மஹத்தமம் ச
ஸன்மார்க்கதோ மாம், நய விச்வமாதஹ
ப்ரஸீத மே த்வாம், சரணம் வ்ரஜாமி
வ்யாஸ முனிவருக்கு சரியான நேரத்தில் அவரின் சந்தேகம் தீர்க்க குருவான நாரதர் வந்தார். எனக்கு அப்படி யாரும் இல்லை. நான் யாரிடம் கேட்பேன்? அதனால் தேவி நீதான் எனக்கு அன்னையாகவும், குருவாகவும் வந்து நல்வழி படுத்த வேண்டும் என்று இந்த நூலின் ஆசிரியர் கூறுகிறார்