Devi-Narayaneeyam devnaagari
தசகம் 18
ராமகதை
1. ஸூர்யாந்வயே தாச,ரதீ ரமேசோ
ராமாபிதோSபூத், பரதோத ஜாதஹ
ஜேஷ்டானுவர்த்தீ, கலு லக்ஷ்மணச்ச
சத்ருக்னநாமாபி, ஜகத் விதாத்ரி!
சூர்யவம்சத்தில் அயோத்தியில் தசரதன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவருக்கு ராமன், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் என்னும் நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். தாசரதி என்னும் பெயர் நால்வருக்கும் பொருந்தும். கோசலைக்கு ராமனும், கைகேயிக்கு பரதனும், சுபத்திரைக்கு லக்ஷ்மணனும் சத்ருக்னனும் பிறந்தார்கள்.
2. விமாத்ரு வாக்யோஜ்,ஜித ராஜ்யபோகோ
ராம; ஸஸீத:, ஸஹலக்ஷ்மணச்ச
சரண் ஜடாவல்,கலவாந் அரண்யே
கோதாவரீ தீரம், அவாப தேவி!
தசரத குமாரர்கள் வளர்ந்து வந்தார்கள். யுவராஜா பட்டத்திற்கான நேரமும் வந்தது. மூத்த குமாரனான ராமனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்தனர். ஆனால் கைகேயி, தன் மகன் பரதனுக்கே பட்டம் சூட்ட வேண்டும், அது தவிர ராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போகவேண்டும் என்று அடம் பிடித்தாள். தசரத மகாராஜாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் பத்னியான சீதையையும் உடன் அழைத்துக் கொண்டு ராமன் புறப்பட்டான். லக்ஷ்மணனும் அவர்களுடனே சென்றான். மூவரும் கோதாவரி நதியை அடைந்தனர். அங்கு சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு, ஆசையுடன் ராமனிடம் நெருங்க, லக்ஷ்மணன் அவளின் மூக்கை அறுத்து, அவமானப்படுத்தி அனுப்பிவிட்டான்.
3. தம் வஞ்சயன், ராவண ஏத்ய மாயீ
ஜஹார ஸீதாம், யதிரூபதாரீ
ராமஸ்ய பத்னீ, விரஹாதுரஸ்ய
ச்ருத்வா விலாபம், வனமப்யரோதீது
ராவணனின் ஆணைப்படி, மாரீசன் பொன் மானாக உருவம் கொண்டு, சீதையின் கண் முன் அங்கும் இங்கும் உலவினான். சீதை பொன் மானைக் கேட்க, ராமன் அதன் பின் சென்றார். சிறிது நேரத்தில், லக்ஷ்மணா! சீதே! என்று அழுகை சத்தம் கேட்டது. உடனே லக்ஷ்மணனும் அங்கு போனான். ராமனும் லக்ஷ்மணனும் இல்லாத அந்த நேரத்தில், ராவணன் சந்நியாசி வேஷத்தில் அங்கு வந்து, சீதையைத் தூக்கிச் சென்றான். ராம லக்ஷ்மணர்கள் திரும்பி வந்தபோது, ஜடாயு மூலம் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அறிகின்றனர். சீதையைக் காணாத ராமன் அழுதான். ராமன் அழுவதைக் கண்ட அந்தக் காடும் அழுதது.
4. ஸ்ரீ நாரதோப்யேத்ய, ஜகாத ராமம்
கிம் ரோதிஷி ப்ரா,க்ருத மர்த்யதுல்யஹ:?
த்வம் ராவணம், ஹந்து,மிஹாவதீர்ணோ
ஹரி :, கதம் விஸ்மர,ஸீதமார்ய?
அந்த நேரத்தில் நாரத மகரிஷி அங்கு வந்தார். ராமன் அழுவதைப் பார்த்தார். அவருக்குப் பழைய சம்பவங்களை நினைவு படுத்தினார். ராமா! நீ பாமர மக்களைப் போல் அழலாமா? தாங்கள் சாதாரண மனிதன் இல்லை. இராவண வதத்திற்காக அவதாரம் செய்த மஹாவிஷ்ணு. இதைத் தாங்கள் மறந்தீர்களா? என்றார்.
5. க்ருதே யுகே, வேதவதீதி கன்யா
ஹரீம் ச்ருதிஞா, பதிமாப்துமைச்சத்
ஸா புஷ்கர த்வீப,கதா ததர்த்த
மேகாகினி தீவ்,ரத பச்சகார
நாரதர் மேலும் சொல்ல ஆரம்பித்தார். க்ருத யுகத்தில் குஸத்வஜன் என்று ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சிறுவயது முதல் வேதம் நன்றாகத் தெரிந்தபடியால் அதற்கு “வேதவதீ” என்று பெயர் வைத்தனர். வேதவதிக்கு சிறுவயது முதல் விஷ்ணுவைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை. அதற்காக ஒரு புஷ்கர க்ஷேத்ரத்தில் கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தாள் .
6. ச்ருதா தயாபூத், அசரீரிவாக் - தே
ஹரி: பதிர்பாவினி ஜன்மனி ஸ்யாது
நிசம்ய தத் ஹ்ருஷ்ட,மனாஸ்ததைவ
க்ருத்வா தபஸ்தத்ர, நினாய காலம்
வேதவதியின் தவத்திற்குப் பலன் கிடைத்தது. “அடுத்த ஜன்மத்தில் விஷ்ணு உனக்குப் பதியாவார்” என்று ஒரு ஆகாசவாணி ஒலித்தது. வேதவதீ தவத்தை மேலும் தொடர்ந்து கொண்டு அங்கேயே இருந்தாள்.
7. தாம் ராவண: காம,சரார்தித: ஸம்
ச்சகர்ஷ; ஸா ச, ஸ்தவனேன தேவீம்
ப்ரஸாத்ய கோபாருண,லோசனாப்யாம்
நிரீக்ஷ்ய தம், நிச்சல,மாததான
வேதவதீ அங்கு தவம் செய்து வரும்பொழுது, ஒருநாள் ராவணன் அங்கு வந்தான். வேதவதியின் அழகில் மோகம் கொண்டான். அவளைத் தன் மனைவி ஆகும்படி கட்டாயப் படுத்தினான். அவள் நிராகரிக்க, அவளின் தலை முடியைப் பிடித்து பலவந்தப் படுத்தினான். அவள் தன் ஜ்வலிக்கும் கண்களால் ராவணனைப் பார்த்தாள். அவள் பார்வையின் தீர்க்கத்தைக் கண்ட ராவணன் ஸ்தம்பித்து நின்றான். அவனால் கை கால்களைக் கூட அசைக்க முடியவில்லை. ராவணன் தேவியை மனதில், மீண்டும் துதித்ததால், கை கால்களை அசைக்க முடிந்தது.
8. சசாப தம் ச, த்வமரே! மதர்த்தே
ஸாபாந்தவோ, ராக்ஷஸ!, நம்க்ஷ்யஸீ! தி
ஸ்வம் கௌணபஸ், ப்ருஷ்ட,மசுத்த தேஹம்
யோகேன ஸத்யோ, விஜஹௌ ஸதீ ஸா
வேதவதீ ராவணனை சபித்தாள். "என்னைத் தொட்ட காரணத்தால் நீ உன் உறவினர்களுடன் அழிவது நிச்சயம். விஷ்ணுவிற்குப் பத்னியாக நினைத்த இந்த உடலை நீ தொட்டதால், இது அசுத்தமானது. இதை நான் வைத்திருக்க மாட்டேன்" என்று தன்னுடைய உடலை விட்டாள்.
9. ஜாதா புன: ஸா, மிதிலேசகன்யா
காலே ஹரிம் த்வாம், பதிமாப தைவாது
ஸ ஹன்யதாம் ஸத்,வரமாச ரேந்த்ரஹ
ஸ்தன்னாச காலஸ்து, ஸமாகதச்ச
நாரதர் சொன்னார், வேதவதிக்கு அடுத்த ஜன்மத்தில் விஷ்ணு கணவனாவார் என்று அசரீரி சொன்னதல்லவா? அந்த வேதவதி தான் இந்த சீதை. ராமனான விஷ்ணுவே அவள் கணவன். அன்று வேதவதி தந்த சாபம் ராவணனுக்குச் சீக்கிரம் பலிக்கட்டும். ராவணனையும் மற்ற ராக்ஷசர்களையும் அழிக்கட்டும். ராவணன் அழியும் காலம் நெருங்கிவிட்டது என்றார்.
10. ததர்த்தமாரா,தய லோகநாதாம்
நவாஹயக்ஞேந, க்ருதோபவாஸ:
ப்ரஸாத்ய தாமேவ, ஸுரா நராச்ச
காமான் லபந்தே; சுபமேவ தே ஸ்யாது
ராவண வதம் செய்வதற்கு, ராமன் உபவாசம் இருக்க வேண்டும். நவாக யக்ஜம் செய்ய வேண்டும். தேவியின் கதைகள் கேட்கவேண்டும், தேவியின் நாமத்தை ஜபிக்க வேண்டும், தேவியின் கீர்த்தனைகள் பாட வேண்டும், தேவியை பூஜை செய்ய வேண்டும். இப்படியாக ஒன்பது நாளும் தேவியின் ஆராதனை நடக்க வேண்டும். இதுதான் நவாக யக்ஜம் எனப்படும். இதனால் தேவி சந்தோஷமடைந்து அனுக்ரஹிப்பாள். அதன் பின் ராவண வதம் நடக்கும். அன்னையின் அனுக்ரஹத்தால் தான் தேவர்களும் மனிதர்களும் தன தேவைகளை அடைகிறார்கள். ராமனுக்கும் நன்மையே வரும் என்று சொல்லிவிட்டு நாரதர் மறைந்தார்.
11. இத்யூ சிவாம்ஸம், முனிமேவ ராம
ஆசார்யமா,கல்ப்ய, ஸ லக்ஷ்மணஸ்த்வாம்
ஸம்பூஜ்ய, ஸுஸ்மேர,முகீம் வ்ரதாந்தே
ஸிம்ஹாதி ரூடாம் ச புரோ ததர்ச
அந்த நாரதரையேத் தன் குருவாக ஏற்று, ராமன் நவாக யக்ஜம் செய்தார். 9 ஆவது நாளின் முடிவில் தேவி சிம்ம வாகனத்தில் ராமனுக்குக் காட்சி தந்தாள்.
12. பக்த்யா நதம் தம் , த்ருதமாத்த ராம!
ஹரிஸ் த்வமம்சேன, மதாஞயைவ
ஜாதோ நரத்வேன, தசாஸ்ய ஹத்யை
ததாமி தச்சக்தி, மஹம் தவேஹ
13. ச்ருத்வா தவோக்திம், ஸ ஹனு மதாத்யைஹி
ஸாகம் கபீந்த்ரை:,க்ருதஸேது பந்தஹ
ஸங்காம் ப்ரவிஷ்டோ, ஹத ராவணாத்யஹ
புரீம யோத்யாம், அகமத் ஸ ஸீதஹ
தேவியைக் கண்ட ராமன் நமஸ்கரித்தார். தான் யார் என்பதை மறந்திருந்த ராமருக்கு தேவி நினைவுபடுத்தினாள். ராமன் சாட்ஷாத் அந்த மகாவிஷ்ணுவேதான். விஷ்ணுவின் அம்சமாக தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இந்த அவதாரத்தின் காரணமே ராவண வதம் தான். தேவியின் ஆணைப்படியே அவர் மனிதனாக அவதரித்தார். ராமன் மறந்திருந்த பூர்வ கதையை நினைவுபடுத்தினாள். ராவணனை வதம் செய்வதற்கான சக்தியையும் தந்தாள். வேதவதீ த்ரேதா யுகத்தில் சீதையாகப் பிறந்திருக்கிறாள். அவளின் சாபத்தால், ராவணன் மரணம் அடைய வேண்டும். சீதையை ராவணன் அபஹரித்தது, ராவண வதத்திற்குக் காரணமாகிறது. அன்னையின் அனுக்ரஹத்துடன் ராமன் அனுமன், வானரப்படை இவைகளின் உதவியுடன் சீதையைத் தேடி, இலங்கையில் இருப்பதை அறிந்து கொள்கிறான். சமுத்ரத்தில் பாலம் கட்டி, இலங்கை சென்று, ராவணை வதம் செய்து, சீதையை மீட்டு, சீதா லக்ஷ்மண சமேதராக அயோத்தி வந்தார். அம்பாளின் கருணை இருந்தால் எந்த காரியமும் சாத்தியமாகும் என்பதற்கு இது உதாரணமாகிறது.
14. ஹா! தேவி! பக்திர், நஹி மே குருச்ச
ந சைவ வஸ்து, க்ரஹ ணே படுத்வம்
ஸத்ஸங்கதிச் சாபி, ந, தே பதந்து
க்ருபா கடாக்ஷா, மயி, தே நமோஸ்து
ராமாய ராம பத்ராய
ராமசந்ராய வேதஸே
ரகு நாதாய நாதாய
ஸீதா பதயே நமஹ
ராமனுக்கு நாரதர் குருவாக அமைந்தார். எனக்கு குருவோ ஸத்சங்கமோ எதுவுமே இல்லை. அதனால் நீதான் எனக்குத் துணை என்று இதன் ஆசிரியர் தேவியை வணங்குகிறார்.
பதினெட்டாம் தசகம் முடிந்தது