न चोरहार्यं न च राजहार्यं न भ्रातृभाज्यनम् न च भारकारि ।
व्यये कृते वर्धत एव नित्यम् विद्याधनं सर्वधनप्रधानं ॥
na chorahaaryaM na cha raajahaaryaMna bhraatR^ibhaajyaMna cha bhaarakaari |
vyaye kR^ute vardhata eva nityam vidyaadhanaM sarvadhanapradhaanaM ||
மகிஷன் மறைந்தவுடன் தேவர்கள் சூர்ய குல மன்னனான சத்ருக்னனை மகிஷனின் சிம்மாசனத்தில் அமர்த்திவிட்டு, தேவர்கள் தத்தம் இருப்பிடம் சென்றனர். அந்த ராஜ்யத்தில் உரிய காலத்தில் மழை பெய்தது. எல்லோரும் சுகமாக சந்தோஷமாக இருந்தனர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தேவியை மறக்கத் தொடங்கினார்கள். அதனால் அசுரர்கள் மீண்டும் வளரத் தொடங்கினார்கள்.
சும்பன் நிசும்பன் என்ற இரு அசுரர்கள் பாதாளத்திலிருந்து பூமண்டலத்திற்கு வந்தார்கள். பிரம்மாவைக் குறித்துக் கடும் தவம் செய்தார்கள். பிரம்மா அவர்கள் முன் தோன்றினார். பிரம்மனிடம் அவர்கள் சாகாவரம் கேட்டனர். பிறந்தவன் இறக்க வேண்டும் என்பது உலக நியதி என்று பிரம்மா சொல்ல, சும்ப நிசும்பர்கள் தேவர்கள், மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் ஆகிய எந்த ஆணினத்தாலும் தங்களுக்கு மரணம் வரக்கூடாது என்று கேட்க அவரும் “அப்படியே ஆகட்டும்” என்று வரத்தைத் தந்து விட்டுத் தன்னிடம் சென்றார். மூ உலகிலும் தங்களை வெல்லக்கூடிய பலம் கொண்ட பெண் இல்லை என்று இறுமாப்பு கொண்டனர். அவர்களுடன் சண்டன் முண்டன் தாம்ரன் ரக்தபீஜன் அனைவரும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் ஸ்வர்கம் சென்று இந்த்ராதி தேவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டு சுகமாக இருந்தனர். தேவர்கள் இருக்க இடம் இன்றி மலைகளிலும் குகைகளிலும் யக்ஜம், பூஜை, அமிர்தபானம் இன்றி கஷ்டப்பட்டு வந்தார்கள்.
100 அஸ்வமேத யாகம் செய்த இந்திரன் கூட கஷ்டப்பட வேண்டிய காலத்தில் கஷ்டத்தைத்தான் அனுபவிக்க வேண்டியுள்ளது. இதை யாரால் மாற்ற முடியும்? இப்படி 1000 வருடம் துன்பப்பட்ட தேவர்கள், தங்கள் குருவான பிரகஸ்பதியிடம் போகின்றனர். எங்களின் துக்கம் தீரவும் சுவர்க்கலோகம் மீண்டும் கிடைக்கவும் வழி சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். பிரகஸ்பதி சொன்னார் “நாம் இப்பொழுது இந்த நேரத்திற்கும், காலத்திற்கும், எந்த உபாயம் பலன் தருமோ, அதைச் . காலம் என்னும் தெய்வத்துக்கு மேல் காலதீதமாகிய தெய்வம் ஒன்று இருக்கிறது. உங்களுடைய வேண்டுகையின் படி, முன்பு மகிஷனை எந்த தெய்வம் வதம் செய்ததோ, அதுவே அந்த தெய்வம். அந்த தேவி இப்போது இமயமலையில் இருக்கிறாள். அங்கு சென்று அந்த தேவியை பீஜ மந்திரங்களுடன் ஸ்தோத்திரம் செய்யுங்கள். உங்கள் காரியும் சித்தியாகும்” என்றார். இந்திராதி தேவர்கள் இமயமலைச் சென்று தேவியைத் துதித்தனர். தேவியும் அவர்களுக்குக் காட்சி தந்தாள். எந்த ரூபத்தில் காட்சி தந்தாள்? கங்கைக்குக் குளிக்கச் செல்லும் ஒரு பெண் போல பார்வதி தேவி வந்தாள்.
தேவி கேட்டாள் “தேவர்களே! நீங்கள் யாரைத் துதிக்கிறிர்கள்? ஏன் கவலையோடு இருக்கிறிர்கள்? உங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? என்று கேட்டாள். தேவர்கள் கொழுப்பேறிய சும்ப நிசும்பர்களின் அட்டகாசத்தையும், அதனால் தேவர்களும் இந்த உலகமும் படும் கஷ்டத்தைச் சொல்கிறார்கள். தேவியின் உடலிலிருந்து கௌசிகீ என்னும் அம்பிகை தோன்றினாள் . அவளின் மற்றொரு பெயர் சரஸ்வதி. கருமை நிறத்துடன் பயங்கர ரூபம் கொண்டபடியால் காளி என்றும் பெயர் கொண்டாள். பயங்கர உருவம் இருத்தாலும் ஸர்வாலங்கார பூஷணையாக, பக்தர்களுக்கு வேண்டியதைத் தரும் க்ருபாவதியாக இருந்தாள்.
“தேவர்களே! நீங்கள் பயப்பட வேண்டாம் நான் சும்ப நிசும்பர்களை அழிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, 18 கைகளை உடைய அந்த தேவி சிம்ம வாகனத்தில் ஏறிக் கொண்டு, இமயமலையின் உச்சியில் அமர்ந்து, மிக ரம்யமான கானத்தை இசைத்துக் கொண்டிருந்தாள். அந்த தேவியின் அழகு பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் சௌந்தர்யமாம். தேவியின் கானத்தைக் கேட்ட பறவைகளும், மிருகங்களும் மோஹம் கொண்டனவாம். தேவர்கள் பரமானந்தம் அடைந்தார்கள்.
அந்த சமயத்தில் சும்பனின் சேவகர்களான சண்டனும், முண்டனும் அங்கு வருகிறார்கள். பாடிக்கொண்டிருக்கும் தேவியைப் பார்த்தனர். ஆச்சர்யத்துடன் சும்பனிடம் சென்று சொல்கின்றனர். ” ராஜாவே! ஒரு அழகிய சுந்தரி சிம்ம வாகனத்தில் இமாசலத்திலிருந்து வந்திருக்கிறாள். அவள் ஒரு பேரழகியாக இருக்கிறாள். அவளின் கானம் கேட்டு பறவைகளும் மயங்கிக் கிடக்கின்றன. அவளை நீ உன் மனைவியாக ஆக்கிக்கொள். உன்னிடம் இல்லாத பொருள் ஏதும் உண்டா? இந்திரனின் ஐராவதம், பாரிஜாதகம், ஏழுமுகமுடைய குதிரை, குபேரனின் பத்மா நிதி, வருணனின் வெண்குடை, சமுத்ரராஜனின் வாடாத தாமரை மலர், யமனின் பாசம் இது போன்று சகலமும் உன்னிடம் இருக்கின்றன. இவைகள் எல்லாம் தேவர்களிடமிருந்து உன்னால் கவரப்பட்டவைகள். ஆனால் மூ உலகிலும் கிடைக்காத ஸ்த்ரீ ரத்தினம் அந்தப் பெண். கிடைப்பதற்கரிய பொருள்கள் அனைத்தையும் உடைய நீ அந்த ஸ்த்ரீ ரத்தினத்தையும் உன் பத்னி ஆக்கிக்கொள்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட சும்பன் உடனே சுக்ரீவனிடம் “நீ போய் நல்லவார்த்தைகள் பேசி அந்தப் பெண்ணை இங்கு அழைத்து வா” என்று சொன்னான்.
சுக்ரீவன் சொன்னான் “அழகிய பெண்ணே! சும்பன் மூஉலக நாயகன். அவன் உன்னிடம் ஆசை வைத்திருக்கிறான். அவன் சாகும் வரை உன் கட்டளைப் படி நடப்பான். நீ அவனை மணந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம்” என்றான். தேவி சொன்னாள் ”அவன் வீரத்தையும், பலத்தையும், அழகையும் நான் அறிவேன். ஆனால் எனக்கு ஒரு விரதம் உள்ளது என்னோடு யுத்தம் செய்து என்னை வெற்றி கொள்பவனையே நான் மணப்பேன். அப்படியில்லாமல் என் சூலத்திற்கு பயந்தால், தேவர்களுடைய சுவர்க்கத்தை அவர்களிடம் தந்து விட்டு, பாதாளம் சென்று சுகமாக வாழுங்கள்” என்றாள். சுக்ரீவன் இதைச் சும்பனிடம் போய்ச் சொல்கிறான்
சும்பன் தூம்ரலோசனனை அனுப்புகிறான். அவனும் முதலில் நல்லவிதமாகவேப் பேசுகிறான். தேவியை சும்பனிடம் கொண்டு போக வேண்டுமல்லவா? ஆனால் தேவி ஒரு பெண் யானை கழுதையை மணக்குமா? ஒரு பெண் சிங்கம் குள்ள நரியைத் திருமணம் செய்து கொள்ளுமா? என்றாள். தூம்ரலோசனனுக்குக் கோபம் வருகிறது. முடிவில் தேவியுடன் யுத்தம் செய்கிறான். தேவியுடன் யுத்தம் செய்தால் என்ன நடக்கும்? தூம்ரலோசனன் வதம் செய்யப்பட்டான். தூம்ரலோசனன் என்பது நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் தான். இது சரியல்ல என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அதை தலை தூக்க விடாமல் ஆரம்பத்திலேயே களைந்து விட வேண்டும். அந்த கெட்ட எண்ணத்தைப் போல் தலை தூக்கிய தூம்ரலோசனனை காளிகா தேவி அழித்தாள்.
அதன் பின் சண்ட முண்டர்கள் போகிறார்கள். யுத்தம் நடக்கிறது. சண்டிகை கோபம் கொண்டு தன நெற்றிக்கண்ணிலிருந்து புலித்தோல் அணிந்தவளும், யானைத்தோலை உத்தரீயகமாக போர்த்தியவளும், பிரம்ம விஷ்ணுவின் தலைகளை மாலையாக தரித்தவளும், வாள் பாசம் போன்ற ஆயுதங்களுடன், பரந்த முகமும் விசாலமான நிதம்பத்துடன், கோபம் கொண்ட முகத்துடனும், காலராத்ரி போல் நிறத்துடனும் காளி என்னும் சக்தியாகத் தோன்றினாள். சண்டனையும் முண்டனையும் பாசக் கயிற்றினால் கட்டினாள். பின் அவர்களின் தலையைக் கொய்து, ரத்த பானம் செய்தாள். அது முதல் கௌசிகீ ‘சாமுண்டீ” என்று அழைக்கப்பட்டாள்.
அதன் பின் ரக்தபீஜன் வருகிறான். தேவிக்கும் அவனுக்கும் யுத்தம் உக்ரகமாக நடக்கிறது . அவன் உடலிலிருந்து பெருகும் ரத்த வெள்ளத்திலிருந்து பல அசுரர்கள் தோன்றியவண்ணம் இருந்தார்கள்.
இதைக் கண்ட பிரம்மாதி தேவர்கள் தங்களின் சக்திகளை ஆயுதங்களுடன் அனுப்பி வைத்தனர். பிரம்ம சக்தி ப்ராம்ணி, வைஷ்ணவி, சிவசக்தியான சாங்கரீ, காத்திகேய ரூபிணீ கௌமாரீ, இந்த்ராணி, வாராஹீ, யமசக்தி, வாருணி ஆகிய அனைவரும் வந்து சேர்ந்தனர் . அசுரர்கள் ரத்தம் பெருகப் பெருக மேலும் மேலும் அசுரர்கள் தோன்றினர் . மனதில் தீய எண்ணம் இருந்தால் அதுவும் இப்படித்தான் வளர்ந்து கொண்டே வரும் என்பதை இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதை அழிப்பதற்கு தேவியின் அருள் வேண்டும். அதனால் தேவியை மனதில் நினைக்க வேண்டும்
அப்பொழுது தேவி சொன்னாள் “சாமுண்டே! நீ வாயை நன்கு திறந்து வைத்துக் கொள் .அவர்கள் உடலிலிருந்து வரும் உதிரத்தை ஒரு துளி கூட கீழே விழாமல் பானம் செய்” என்றாள் ,அதன்படி அவனை அடித்து கத்தியால் குத்தி அவனது ரத்தத்தைப் பருகினார்கள். மேலும் மேலும் ரக்தபீஜர்கள் உண்டாவது தடுக்கப்பட்டதால் தேவியுடன் யுத்தம் செய்ய சக்தி இல்லாமல் அவனும் மாண்டுபோனான். தெய்வ சிந்தனை மனதைவிட்டு அகலும் போது கெட்ட திய சிந்தனைகள் தலை தூக்கும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
அதன் பின் நிசும்பன் வருகிறான் கௌசிகீ அவனை வதம் செய்கிறாள் அதன் பிறகு சும்பன் வருகிறான். காளிகாதேவி அவனை வதம் செய்கிறாள். சும்பனும் அழிந்த பின் மற்ற அசுரர்கள் தேவியிடம் சரணாகதி அடைகிறார்கள். அவர்களை பாதாள லோகத்திற்கு அனுப்பிவைக்கிறாள் . அங்கு அவர்கள் சுகமாக இருக்கிறார்கள். தேவர்களுக்குச் சுவர்க்கலோகம், மனிதர்களுக்கு பூலோகம், அசுரர்களுக்கு பாதாளலோகம் இப்படி அவரவர்களுக்குத் தனி லோகமே தேவியால் தரப்பட்டிருக்கிறது. அதனால் தனது தகுதிக்கு மீறி எதையும் ஆசைபடுவது தவறு என்பதை நாம் இதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும்.
அசுரர்கள் அழிந்த பிறகு தேவர்கள் சந்தோஷத்தால் தேவியை துதிக்கின்றனர். அவர்கள் சுவர்க்கத்தை மீண்டும் அடைந்தார்கள் .யக்ஜம் ஹவிர் பாகங்களை மீண்டும் பெற்றனர் .பூமியிலும் சகல ஸுபிக்ஷமும் ஏற்படுகிறது அதனால் சகல ஜீவராசிகளும் மனிதர் உள்பட சந்தோஷமாக இருக்கின்றனர்.
தம்பம் (தற்பெருமை), தர்பம், (கர்வம்), அபிமானம் (எல்லாவற்றிற்கும் தானே காரணம் என நினைப்பது), க்ரோதம் (பழிவாங்கும் எண்ணம்), பாருஷ்யம் (கடுமையான பேச்சு) இவைகள் எல்லாம் அஹங்காரத்தின் அங்கங்கள். இவைகள் அசுர சம்பத்துக்கள். இது பகவத் கீதையில் (16/5) சொலப்பட்டிருக்கிறது. இவைகள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் அந்த தேவியின் கருணை வேண்டும். இந்த தேவீ நாராயணீயத்தின் ஆசிரியர் சொல்கிறார் “தாயே! இந்த அசுர சம்பத்துக்களைக் களைந்து, பகவானை அடைவதற்கான சாதனைகளான நல்ல பண்புகளும் நல்ல நடத்தையும் ஆகிய தெய்வ சம்பத்துக்கள் என்னிடம் வளர நீயே எனக்கு கருணை காட்ட வேண்டும் என்று வேண்டுகிறார்.