தசகம் 20
தேவகீ புத்ரவதம்
காளிந்தி நதிக்கரை ஓரத்தில் ஒரு மதுவனம் நம் இருந்தது. அதில் லவணன் என்னும் ஒரு அஸுரன் இருந்தான். அவன் தன் தவ வலிமைக் காரணமாக மஹரிஷிகளைத் துன்பப்படுத்தி வந்தான். லக்ஷ்மணனின் தம்பியான சத்ருக்னன், அந்த அஸுரனைக் கொன்று, அவ்வனத்திற்கு மதுராபுரி என்று பெயர் வைத்து, தன் இரு மகன்களிடம் ஒப்படைத்து விட்டு ஸ்வர்கம் சென்றான். சூரிய வம்சம் அழியும் நேரத்தில், யாதவர்கள் அங்கு குடி புகுந்தனர். யயாதி புத்திரனான சூரசேனன் அவர்களை ரட்க்ஷித்து வந்தான். அந்த சூர சேனனுக்கு வருணனின் சாபத்தால், காசிபர் மகனாகப் பிறந்தார். அவரே வஸுதேவர். இவர் தன் தந்தை இறந்த பிறகு, வைசிய விருத்தியில் ஜீவனம் செய்து வந்தார். அப்பொழுது உக்ரசேனன் மதுராவை ஆண்டு வந்தான். அவனுக்கு கம்ஸன் பிறந்தான். காசிபரின் மனைவியாகிய அதிதியும் வருண சாபத்தால் தேவகனுக்கு மகளாகப் பிறந்து தேவகீ என்று அழைக்கப்பட்டாள்.
1.அதோருபுண்யே, மதுராபுரே து
விபூஷுதே மௌக்,திக மாலிகாபிஹி
ஸ்ரீ தேவகீ சௌரி விவாஹ,ரங்கே
ஸர்வை: ச்ருதம் வ்யோ,மவச: ஸ்புடார்த்தம்
துஷ்டர்களை அழிப்பதற்கு தேவ லோகத்தில் நடந்தவைகளைப் பார்த்தோம். இனி பூமியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறோம். பாற்கடலிலிருந்து திரும்பி வந்த தேவர்களும், ப்ரம்மனும் இனி நமக்குக் கவலை இல்லை. கிருஷ்ணன் பிறப்பார். நம் கவலை எல்லாம் தீர்ந்துவிடும் என்று நிம்மதியாக இருக்கின்றனர். பூமியில் மதுராபுரியில் வசுதேவர் தேவகிக்குக் கல்யாணம் நடக்கிறது. தன் பிரிய சகோதரியைக் கணவன் வீட்டில் கொண்டுவிட வசுதேவர் தேவகியைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டுத் தானே தேரை ஓட்டிக் கொண்டு போகிறான். போகும் வழியில் அவனுக்கு அசரீரி கேட்கிறது. யார் பேசுகிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்கள்? இது ஒன்றும் கம்ஸனுக்குப் புரியவில்லை.
2."அவேஹி போ தேவக, நந்தனாயாஹா
ஸுதோSஷ்டம: கம்ஸ, தவாந்தக: ஸ்யாது"
ஸ்ருத்வேதி தாம் ஹந்து,மஸிம் ததானஹ
கம் ஸோ நிருத்தோ, வஸுதேவமுக்யைஹி
"தேவகியின் 8 ஆவது புத்ரன் உன்னைக் கொல்வான்" என்ற இந்த அசரீரி வாக்கைக் கேட்டதும், கம்ஸனுக்கு பயம் வந்துவிடுகிறது. தன் உயிருக்கு ஆபத்து என்றதும், தங்கை இருந்தால் தானே புத்திரன் பிறப்பான் என்று, அவளின் தலைமயிரைப் பிடித்து இழுத்து, கொல்வதற்கு வாளை எடுக்கிறான். வஸுதேவரின் நண்பர்களும், யாதவர்களும், “தங்கையைக் கொல்லாதே” இது பாபம் என்று தடுக்கிறார்கள். அவன் அதைக் காதிலேயே வாங்கவில்லை. அவர்களுக்கும் கம்ஸனுக்கும் சண்டை நடக்கிறது.
3. அதாSSஹசௌரி:, ச்ருணு கம்ஸ! புத்ரானு
ததாமி தேSஸ்யா:, சபதம் கரோமி
ஏதத் வசோ மே, வ்யபிசர்யதே சேது
மத்பூர்வஜாதா, நரகே பதந்து
யாருடைய பேச்சையும் காதில் வாங்காத கம்ஸனைப் பார்த்து வஸுதேவர் சொல்கிறார்
"தேவகிக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளியும் உன்னிடம் தந்து விடுகிறேன். இது சத்யம். நான் வாக்குத் தவறினால் என் முன்னோர்கள் நரகத்திற்குச் செல்வர்" என்றார். எல்லோரும் இதுவே சரி என்று சொன்னார்கள்.
4. ச்ரத்தாய சௌரேர், வசனம் ப்ரசாந்த-
-ஸ்தாம் தேவகீம் போஜ,பதிர் முமோசஹ
ஸர்வே ச துஷ்டா, யதவோ நகர்யாம்
தௌ தம்பதீ சோஷ,துராத்த மோதம்
வஸுதேவர் சொன்ன வார்த்தயை மீற மாட்டார் என்று நம்பிக்கை வைத்து, கம்ஸன் கோபத்தை விட்டுச் சாந்தமானான். தேவகீ வஸுதேவர் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தனர்.
5. காலே ஸதீ புத்ரம்,அஸுத; தாதஹ
கம்ஸாய நிச்சங்க,மதாத் ஸுதம் ஸ்வம்
ஹந்தா ந மேSயம், சிசுரித்யுதீர்ய
தம் ப்ரத்யதாத், போஜபதிச்ச தஸ்மை
தேவகீ யௌவனம் அடைந்து கர்பவதியாகி, ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். வஸுதேவரும் குழந்தயைக் கேட்க, அவளும் இக்குழந்தயைக் காப்பதற்கு ஏதும் பிராயச்சித்தம் செய்ய முடியாதா? என்று கேட்கிறாள். நல்வினை தீவினையால் வரும் பயன்களை யாரானாலும் அனுபவித்தே ஆகவேண்டும் என்று சொல்லிக் குழந்தையை கம்ஸனிடம் கொண்டு தருகிறார். சத்யவானான வஸுதேவரிடம் கம்ஸன் சொல்கிறான் "8 ஆவது குழந்தை தானே என்னைக் கொல்லப் போகிறது. இது எனக்கு எதிரி அல்ல. அதனால் உம்மிடமே இருக்கட்டும்" என்று வஸுதேவரிடம் குழந்தையைத் திருப்பிக் கொடுத்து விடுகிறான்.
6. அதாSSசு பூபார, வினாசனாக்ய
த்வன்நாடகப்ரேக்ஷண கௌதுகேன
ஸ்ரீநாரத: ஸர்வவிதேத்ய கம்ஸம்
அத்ருச்ய ஹாஸம், ஸகலம் ஜகாத
8 ஆவது குழந்தைதானே எனக்கு எதிரி. மற்ற குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும் என்று சொன்ன கம்ஸனின் வார்த்தை கேட்டு, மந்திரிகளும் மற்றவர்களும் சந்தோஷித்தனர். அப்பொழுது நாரதர் வருகிறார். அவருக்கு வஸுதேவர் தேவகிக்குப் பிறக்கும் குழந்தகளின் பூர்வ சரித்திரம் தெரியும். பூமியின் பாரத்தைக் குறைப்பது தேவியின் திட்டமல்லவா? அதற்கு அவரால் ஆனதைச் செய்ய வேண்டுமல்லவா? அதனால் நாரதர் சொல்கிறார்,
7. த்வம் பூப! தைத்ய: கலு காலநேமிஹி
ஜகத்ப்ரஸித்தோ, ஹரிணா ஹதச்ச
ததோSத்ர ஜாதோஸி ஸுரா ஹரிஸ்ச
த்வாம் ஹந்துமிச்சந்,த்ய துனாSபி சத்ரும்
கம்ஸா! நீ முன் ஜன்மத்தில் காலநேமி என்னும் உலகம் முழுவதும் அறிந்த ஒரு அஸுரன். யுத்தத்திலே நீ விஷ்ணுவால் கொல்லப்பட்டாய். இந்த ஜன்மத்தில் நீ உக்ரசேனனுக்கு மகனாக, யது வம்சத்தில் பிறந்திருக்கிறாய். ஆனாலும் உன்னைத் தேவர்களும் விஷ்ணுவும் எதிரியாகத்தான் நினைக்கிறார்கள். உன்னைக் கொல்வதற்கே அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று நாரதர் தன்னுடைய கலகத்தை ஆரம்பித்தார்.
8. தேவாஸ்த,தர்த்தம் நர ரூபி,ணோத்ர
வ்ரஜே ச ஜாதா, வஸீதே வமுக்யாஹா
நந்தா தயச்ச த்ரிதசா; இமே ந
விஸ்ரம்பணீயா, ந ச பாந்தவாஸ்தே
தேவர்கள் உன்னைக் கொல்வதற்கான திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்கள். அவர்கள் மானிட ரூபத்தில் அவதரித்திருக்கிறார்கள். சிலர் மதுராவிலும், சிலர் நந்தகோபர் இருக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். உனக்கு இது தெரியவில்லை. எல்லோரும் நண்பர்கள் போல் நடிக்கிறார்கள். ஏன் வஸுதேவரும், நந்தகோபரும் கூட நண்பர்கள் போல் நடிக்கிறார்கள் என்றார்.
9. த்வம் வ்யோம வாணீம், ஸ்மர; தேவகஸ்ய
புத்ர்யா: ஸுதேஷ்வ, ஷ்டமதாம் கத: ஸன்
ஸ த்வாம் நிஹந்தா, ஹரிரேவ; சத்ருஹு
அல்போSபி நோபேக்ஷ்ய, இதீர்யதே ஹி
உனக்கு ஒரு அசரீரி வாக்கு கேட்டதே! 8 ஆவது குழந்தை உன்னைக் கொல்லும் என்று சொன்னதே! அந்த 8 ஆவது குழந்தை யார் என்று உனக்குத் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை. அந்த விஷ்ணுவே தான் 8 ஆவது குழந்தையாக அவதரிக்கப் போகிறார். நீ பூர்வ ஜன்மத்தில் கால நேமியாக இருந்த போதும் அவர்தான் உன்னைக் கொன்றார். அவர் உன் ஜன்ம விரோதி. சத்ரு அல்பன் ஆனாலும் அலட்க்ஷயம் செயக்கூடாது.
10. ஸர்வாத் மஜானாம், ந்ருப! மேளனேஸ்யாஹா
ஸர்வேSஷ்டமா: ஸ்யு:, ப்ரதமே ச ஸர்வே
மாயாவினம் வித்தி, ஹரிம் ஸதேதி
கதே முனௌ க்ரோ,தமியாய கம்ஸஹ
நீ முதல் குழந்தயை ஏன் கொல்ல வேண்டும் என்று விட்டு விட்டாய். ஒன்றை நீ அறிந்து கொள். அந்த விஷ்ணு மாயாவி. எதையும் செய்யக் கூடியவன். எட்டு குழந்தைகளையும் வட்டமாக நிற்க வைத்தால் எது 8 ஆவது குழந்தை? வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக எண்ணிப்பார்? எது 8 ஆவது குழந்தை? முதல் குழந்தை கூட 8 ஆவது ஆகலாமே? எனவே கம்ஸா! நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்
11, ஸ தேவகீ, ஸூனு,மரம் ஜகான
காராக்ருஹே தாம், பதிமப்ய பத்னாது
தயோ: ஸுதான் ஷட், கலு ஜாதமாத்ரான்
ஹத்வா க்ருதம் ஸ்வம், ஹிதமேவ மேனே
கம்ஸன் மீண்டும் தேவகியிடம் சென்று கொடுத்த குழந்தயை வாங்கி கற்பாறையில் அடித்துக் கொன்று விடுகிறான். தேவகீயையும் வஸுதேவரையும் சிறையில் வைக்கிறான். அதன் பின் பிறந்த 6 குழந்தைகளையும் அப்படியே கொன்று விடுகிறான். இவர்கள் சிறையில் இருக்கும் வரை நமக்கு பயம் இல்லை என்று நினைக்கிறான்.
12. காயேன வாசா, மனஸேந்த்ரியைர்வா
மா ஜாது பாபம், கரவாணீ தேவி!
மமாஸ்து ஸத் கர்ம, ரதி:ப்ரியஸ்தே
பவானி; பக்தம் குரு மாம் நமஸ்தே.
சரீரத்தாலேயும், மனதினாலேயும் ஒருவன் நல்லதையேச் செய்ய வேண்டும். அது நல்ல கதியைத் தரும். செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் நல்லதோ தீயதோ எந்த கதியும் இல்லை. செய்யக் கூடாததைச் செய்தால் அதோகதிதான். மனதாலும், உடலாலும் நான் எந்த பாபச் செயல்களையும் செய்யக்கூடாது. நான் எப்போதும் தேவிக்கு ப்ரியமுடையவனாக இருக்க வேண்டும் என்று இந்த கவி வேண்டுகிறார்.
இருபதாம் தசகம் முடிந்தது