ENQUIRY geetanjaliglobalgurukulam

Wednesday, 22 February 2023

தசகம் 7 சுகோத் பத்தி

 தசகம் 7https://krishvasa.blogspot.com/

சுகோத் பத்தி    

1. க்ருஷ்ணஸ்ய தஸ்யாரணித: சுகாக்யஹ-
  ஸ்தவ ப்ரஸாதாத ஜனிஷ்ட புத்ரஹ
  ஹ்ருஷ்டோ முனிர் மங்களகர்ம சக்ரே
  தத்ரேSதிதேயா வவ்ருஷு: ஸுமானி
நாரதர் உபதேசப்படி த்யானம் செய்த வ்யாஸருக்கு சிவன் காட்சி தந்து நல்ல ஸத் புத்திரன் ஜனிப்பான் என்று அருள் செய்கிறார். புத்திரன் ஜனிக்க வேண்டும் என்றால் விவாகம் செய்து கொள்ள வேண்டும். தன் மன நிலையில் அது தகுந்ததல்ல என்று நினைக்கிறார். அப்பொழுது இந்திரன் க்ருதாப்ஜி என்ற அப்ஸரசை அனுப்புகிறார். க்ருதாப்ஜி ஆகாசத்தில் தோன்றி வ்யாஸரைத் தன் வசம் இழுக்க முற்பட்டாள். வ்யாஸர் வித்யாசமான மனநிலை உடையவராதலால், அவர் மனதிற்கும். புத்திக்கும் போராட்டம் ஏற்படுகிறது. மனம் அப்ஸரஸின் அழகிலிலும் லாவண்யத்திலும் ஈடுபட்டாலும் அறிவு காம வழியில் செல்வதைத் தடுக்கிறது. முன்பு புரூரவன் ஒரு பெண்ணால் அவமானம் அடைந்தான். அதாவது ஸீத்யும்னன் பெண்ணுருவாக இருந்த போது அவனுக்கும் புதனுக்கும் பிறந்தவன் புரூரவன். அவன் நீதி தவறாது அரசாட்சி செய்து யாகங்களையும் தானங்களையும் செய்து வந்தான். இந்த புரூரவ சக்ரவர்த்தியின் பெருமையும் புகழும் கேட்டு இந்த்ரலோகத்து ஊர்வசி இவனை மணந்து கொள்ள விரும்பினாள். மானிடனிடத்தில் மோகம் கொண்டதால் ப்ரம்மன் அவளை பூலோகத்திற்குப் போகும்படிச் சபித்தார். பூலோகம் வந்து புரூரவனை காந்தர்வ மணம் புரிந்தாள். அப்பொழுது அவள் சில நிபந்தனைகளைச் சொன்னாள். 1. என்னை மறவாமல் ரட்க்ஷிக்க வேண்டும். 2. நான் கொடுக்கும் நெய்யை தினந்தோறும் சாப்பிட வேண்டும். வேறு எதையும் சாப்பிடக்கூடாது. 3. என்னிடம் இருக்கும் உரணங்களை உம்மிடம் தருகிறேன். அதைக் களவு போகாமல் காக்க வேண்டும். 4. நீர் நிர்வாணியாகவும் பிற பெண்களுடன் சேரும் போதும் நான் பார்க்கமாட்டேன். இதில் எது தவறினாலும் நான் உம்மைப் பிரிந்து விடுவேன் என்று சொல்ல, அரசனும் சம்மதித்து, அவளின் மோகத்தால் மதி இழந்து, நாடு, அரசநீதி, மக்கள் அனைத்தையும் மறந்து பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தான்.
இந்த சூழ்நிலையில் இந்திரன் பல நாட்களாக ஊர்வசியைக் காணவில்லையே என்று, அவள் இருக்கும் இடம் பூலோகத்தில் புரூரவஸின் அந்தப்புரம் என்று அறிந்து, கந்தர்வர்களை அழைத்து, அவளின் உயிருக்கு உயிரான உரணங்களை நீங்கள் கவர்ந்து வந்தால் அவள் தானகவே வருவாள் எனவே உடனே புறப்படுங்கள் என்றார். அதன்படி கந்தர்வர்கள் உரணங்களைக் கவர்ந்து செல்ல இதை அறிந்த ஊர்வசி " ஐயோ! என் உயிர் போன்ற உரணங்கள் களவு போனதே! ஏ! அரசனே! கேட்பார் யாரும் இல்லையா? நீ எந்தப் பெண்ணுடன் உறங்குகிறாய்? நான் உன்னைப் பிரியும் காலம் வந்ததே” என்று உரத்த குரலில் அழுதாள். குரல் கேட்டு அரசன் வேகமாக ஓடி வந்தான். அப்பொழுது கந்தர்வர்கள் மாயையால் ஒரு மின்னலை உண்டாக்கினார்கள். நிர்வாணமாயிருக்கும் அரசனைப் பார்த்தாள் ஊர்வசி. உடனே அவனைப் பிரிந்து போனாள். 
நிபந்தனைகளை மீறியதால் தானே இப்படி நடந்தது. இப்பொழுது நான் ஆடைகளை உடையவனாக இருக்கிறேன் . ஊர்வசி மீண்டும் வரமாட்டாளா என்ற ஆசையுடன் அவளைத் தேடித் தேடி அலைந்து குருக்ஷேத்ரத்தில் ஊர்வசியைக் கண்டான். புரூரவன் ஊர்வசியிடம் " பெண்ணே! என்னைவிட்டுப் போகாதே! நீ என்னைப் பிரிந்தால் என் உயிர் போய்விடும். அந்தப் பழி உன்னையே சேரும்" என்று புலம்பினான். ஊர்வசி சொன்னாள் "அரசனே! உன் புத்தி எங்கு போனது? நான் ஒரு வேசி அல்லவா? வேசியின் அன்பு நிலையானதாகுமா? ஒரு நல்ல குலத்து அரசன் பெண்களிடமும் கள்வர்களிடமும் அன்பு காட்டலாமா? இது நீதியா? நீதி மறந்த நீர் என்முன் நிற்காதே. போ!” என்று விரட்டினாள். அரசன் மிகுந்த துக்கம் அடைந்தான்.
அது போல் தான் ஆகிவிடக்கூடாது என்று நினைக்கிறார். தான் செய்ய வேண்டிய அக்னி காரியங்களைச் செய்ய, அரணியில் மத்தைப் பூட்டி அக்னி உண்டாக்க முயலும் போது, க்ருதாப்ஜி ஒரு கிளி உருவம் எடுத்து அங்கும் இங்கும்மாக ஆகாசத்தில் சிங்காரமாக ஊர்ந்தாள்.  அதைக் கண்ட வ்யாஸர் உணர்ச்சி வசப்பட அவரது வீர்யம் சிதறி அரணியில் விழுகிறது. அந்த அரணியிலிருந்து இவரை போல் ஒரு புத்திரன் ஜனிக்கிறான். இரண்டாவது அக்னி போன்று தோன்றிய அக்குழந்தையைக் கையில் எடுத்துத் தழுவி கங்கா ஸ்நானம் செய்வித்து சாதகாதி கர்மங்களைச் செய்து, சுக ரூபியான அப்ஸரின் மோகத்தால் உண்டான புத்ரனானதால் சுகன் என்று பெயர் வைத்தார்.

2. கேசிஜ் ஜகு: கேசன வாத்யகோஷம்
  சக்ருச்ச நாகே நந்ருது: ஸ்த்ரியச்ச
  வாயுர் வவௌ ஸ்பர்சஸுக: ஸீகந்தஹ
  சுகோத்பவே ஸர்வஜனா: ப்ரஹ்ருஷ்டாஹா
ஆகாஸத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது. தேவர்கள் துந்துபி முதலிய பஞ்சவாத்யங்களை முழங்கினர். கந்தர்வர்கள் பாடினர். நாரதர் முதலிய ரிஷிகள் ஆசீர்வதித்தனர். காற்று சுகந்தமாக வீசியதாம். உலகத்தில் உள்ள அனைவரும் ஆனந்த சாகரத்தில் மூழ்கினர்.

3. பால: ஸ ஸத்யோ வவ்ருதே, ஸுசேதா
  ப்ருஹஸ்பதேராத்தஸமஸ்த வித்யஹ
  தத்வா விநீதோ குருதக்ஷிணாம் ச
  ப்ரத்யாகதோ ஹர்ஷயதி ஸ்ம தாதம்
வ்யாஸர் மகனுக்கு உபநயனம் செய்வித்தார். சுகர் தேவ குருவான ப்ரகஸ்பதியிடம் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுணர்ந்து அவருக்கு குருதட்ஷணையும் கொடுத்துவிட்டுப் பின் வ்யாஸரிடம் வந்தார். வித்தைகளைக் கற்றுணர்ந்த தன் மகன் எந்த கர்வமும் இல்லாமல் அடக்கமாக இருப்பதைக் கண்டு சந்தோஷம் கொண்டார்.

4. யுவானமேகாந் ததப; ப்ரவ்ருத்தம்
  வ்யாஸ: கதாசித் சுகமேவமூசே
  "வேதாம்ச்ச சாஸ்த்ராணி ச வேத்ஸி புத்ர;
  க்ருத்வா விவாஹம் பவ ஸத்க்ருஹஸ்தஹ
எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சந்யாஸி போல் இருக்கும் சுகரிடம், வ்யாஸர் "விவாஹம் செய்துகொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு செய்ய வேண்டிய தேவ யக்ஜம், பிதுர்யக்ஜம் போன்ற கர்மங்களை மனைவியுடன் செய்து, பிதுர்க்கடனினின்று எனக்கு விமோசனம் தர வேண்டும். புத்திரன் இல்லாதவனுக்கு சுவர்க்கம் இல்லை என்று தர்ம சாஸ்த்ரங்கள் சொல்கின்றது. இல்லறதர்மம் மிகவும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இல்லறத்திலிருந்தும் முக்தி அடையலாம். அனைவரும் சந்யாஸிகள் ஆனால் எப்படி சிருஷ்டி உற்பத்தியாகும். அதனால் நீ விவாஹம் செய்துகொள்" என்று ஒரு தந்தையின் இயல்பான குணத்துடன் சொன்னார்.

5. ஸர்வாச்ரமாணாம் கவயோ விசிஷ்டா
  க்ருஹாச்ரமம் ஸ்ரேஷ்டதரம் வதந்தி;
  தமாச்ரித ஸ்திஷ்டதி லோக ஏஷ;
  யஜஸ்வ தேவான் விதிவத் பித்ரும்ச்ச
ஏகாந்த சந்யாஸ தர்மத்தைவிட இல்லறதர்மம் மிகவும் உயர்ந்தது. எல்லாவகையிலும் உயர்ந்ததாகவேச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே நீ விவாஹம் செய்து கொண்டு குழந்தைகளை உற்பத்தி செய்து நன்றாக இருக்கவேண்டும். அப்பொழுதான் நம் முன்னோர்கள் கரையேறுவார்கள். உன்னுடைய கடமைகளைச் சரிவர செய்து, பித்ருக்களைத் தர்ப்பணம் முத்லியவைகளால் திருப்திபடுத்தி புத்ர பௌத்ரர்களைப் பெற்று சந்தோஷமாக இருந்து எங்களைக் கரையேற்ற வேண்டும் என்றார். இள வயதில் திருமணம் செய்து கொண்டால் தான், புத்ர பௌத்ரர்களைப் பெற்றுக் கடமைகளைச் செய்துப் பின் தவம் செய்யப் போக முடியும். சுகர் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் தான் கரையேற முடியாது என்று நினைக்கிறார். அதனால் விவாஹம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

6. தவாஸ்து ஸத்புத்ர; ருணாதஹம் ச
  முச்யேய; மாம் த்வம் ஸுகினம் குருஷ்வ;
  புத்ர: ஸுகாயாத்ர பரத்ர ச ஸ்யாது
  த்வாம் புத்ர! தீவ்ரைரலேபே தபோபிஹி
உன்னைப் புத்திரனாகப் பெற நான் பலகாலம் தவம் செய்தேன். அதனால் நீ இளவயதில் திருமணம் செய்து, உனக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கும் குழந்தை பிறந்து, அதாவது கொள்ளுப் பேரன் பிறந்து பார்க்க வேண்டும், என்னைக் கரையேற்ற வேண்டும் என்றார். எல்லோருக்கும் ஏற்படகூடிய இயற்கையான ஆசை. இந்த ஆசைதான் வ்யாஸர் மனதிலும் வந்தது.

7. கிஞ்ச ப்ரமாதீனி ஸதேந்த்ரியாணி
  ஹரந்தி சித்தம் ப்ரஸபம் நரஸ்ய
  பச்யன் பிதா மே ஜனனீம் தபஸ்வீ
  பராசரோபி ஸ்மரமோஹிதோSபூது

8. ய ஆச்ரமாதா ச்ரமேதி தத்தது
  கர்மாணி குர்வன் ஸ ஸுகீ ஸதா ஸ்யாது
  க்ருஹாச்ரமோ நைவ ச பந்தஹேதுஹு
  ஸ்தவயா ச தீமன்! க்ரியதாம் விவாஹ:
இல்லற வாழ்வில் நியாயமான முறையில் பொருளைச் சம்பாதித்து, விதித்த கர்மங்களைக் கிரமப்படிச் செய்தால் பந்தத்தினின்றும் விடுபடலாம். விதித்த கர்மங்களை முறைப்படிச் செய்பவனுக்குச் சாதிக்க முடியாதது எது? இல்லற வாழ்க்கையில் தேவர்களையும், பித்ருக்களையும், மனிதர்களையும் த்ருப்தி அடையச் செய்து, விதித்த கர்மங்களைச் சரிவரச் செய்து, ஸத் புத்திரனைப் பெற்று, அவனை இல்லறத்தில் ஈடுபடுத்திப், பின் வானப்ரஸ்தாச்ரமத்தை அடைந்து, சில காலம் அதில் இருந்து பின் சந்யாஸ ஆச்சிரமம் அடைவாய்.
      இல்லறத்தில் ஈடுபடாதவனுக்கு இந்த்ரியங்களையும் புலன்களையும் வெல்வது எளிதல்ல. விஸ்வாமித்திரர் மேனகயைக் கண்டு மோகித்து சகுந்தலையை பெற்றார். என் பிதாவான ப்ராசரர் மச்சகந்தியை மோகித்தார். ப்ரம்மனும் தன் புத்ரியிடம் மோகம் கொண்டு பின் சிவனால் தெளிவடைந்தான். இதை எல்லாம் யோசித்து நான் சொன்னபடி விவாஹம் செய்து கொள் என்றார். சுகரிடம் எள்ளளவும் மாற்றம் இல்லாததால் மன வேதனை அடைந்து அழுகிறார்.

9. ஏவம் ப்ருவாணோபி சுகம் விவாஹா-
  -த்யஸக்தமா ஜ்ஞாய பிதேவ ராகீ
  புராணகர்த்தா ச ஜகத்குரு: ஸ
  மாயாநிமக்னோSச்ருவிலோசனோSபூது
வ்யாஸர் ஜகத் குரு, புராணங்களை எழுதியவர். அவர் ஏன் அழ வேண்டும்? தபஸ் செய்ய  சக்தி குறைந்ததா? இல்லை. தேவியிடம் பக்தி குறைந்ததா ? இல்லை. பின் ஏன் அழ வேண்டும்? பாசம். மகன் விவாஹம் செய்து கொள்ளவில்லையே என்ற பாசம். மாயை. ஜகமே மாயையில் உழலுகிறது. ஆனால் சுகர் பல ஜன்மங்களாக என்னைத் தொடர்ந்து வந்த மாயை கிழவனாகி, இப்பிறவியில் என்னை விட்டு விலகி விட்டது. எனவே விவாஹம் என்னும் மாயையில் சிக்க மாட்டேன். முற்றும் துறந்த முனிவர்களையும் மாயையில் சிக்க வைக்கும் அந்த மாயாசக்தியை நான் வழிபடுவேன் என்று சொல்கிறார். சுகர் சுக போகங்களிலிருந்து விலகி நிற்கிறார்.

10. போகேஷு மே நிஸ்ப்ருஹதாSஸ்து மாதஹ
  ப்ரலோபிதோ மா கரவாணி பாபம்;
  மா பாததாம் மாம் தவ தேவி! மாயா;
  மாயாதிநாதே! ஸததம் நமஸ்தே
      இந்த சுகர் எப்படி மாயையிலிருந்து விலகி அதன் பிடியில் சிக்காமல், மன உறுதியுடன் இருக்கிறாரோ அப்படிப் பட்ட மன உறுதியை எனக்கும் தா என்று இந்த கவிஞன் வேண்டுகிறார்.
ஏழாம் தசகம் முடிந்தது

No comments: