ENQUIRY geetanjaliglobalgurukulam

Wednesday, 24 May 2023

10 தசகம்10 சக்தி ப்ரதானம்

 

தசகம்

10

சக்தி ப்ரதானம்






தசகம்
10

சக்தி ப்ரதானம்

தசகம்10

சக்தி ப்ரதானம்

1. ததோ விமாநா,தஜ விஷ்ணுருத்ராஹா

  த்வத் கோபுர த்வார்ய, வருஹ்ய ஸத்யஹ

  ஸ்த்ரிய: க்ருதாதேவி தவேச்சயைவ

  ஸவிஸ்மயாஸ், த்வந்,நிகடம் ஸமீயுஹு

      தேவியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடனும் சந்தோஷத்துடனும், கோபுர துவாரம் அருகில் வந்தனர் மும்மூர்த்திகள். அவர்களை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. அப்பொழுது தேவி கோபுர துவாரத்தை அடைத்து விட்டு அவர்கள் மூவரையும் பெண்ணாக மாற்றினாள்.

2. க்ருதப்ரணா மா.ஸ்தவ பாதயுக்ம-

   -நகேஷு விச்வம் ப்ரதி பிம்பிதம்தே

  விலோக்ய ஸாச்சர்யம், அமோக வாக்பிஹி

  ப்ருதக் ப்ருதக் துஷ்டு,வு ரம்பிகே த்வாம்

      பெண்ணாக மாறிய அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சர்யமடைந்தனர். இது தேவியின் கருணையே என்று நினைத்து தேவியை நமஸ்கரித்தனர். அப்பொழுது கண்ணாடி போன்ற அன்னையின் பாத நகத்தில் ப்ரம்மாண்டங்களையும், ப்ரம்மாதி தேவர்கள் மூவரையும், அண்ட சராசரங்களையும், இந்த்ரன் வாயு, அக்னி, நாரதர், மேருமலை மற்றும் தாமரைமலரில் நான்முகனை சத்யலோகத்திலும், விஷ்ணுலோகத்தில் ஆதிசேஷன் மேல் மஹாவிஷ்ணுவையும், கைலாயத்தில் ருத்ரனையும், மற்றும் மது கைடபர்கள் ஆகிய அனைத்தையும் கண்டு ஆச்சர்யமடைந்தனர். அன்னையின் பாத தரிசனத்தில் அற்புதங்களைக் கண்டபடியே 100 வருடங்கள் ஆயிற்று. ஒருநாள் மஹாவிஷ்ணு தேவியை துதிக்கத் தொடங்கினார். மூலப்ரக்ருதியாகிய தேவியே! உனக்கு நமஸ்காரம். சித்தியும் நீயே! விருத்தியும் நீயே! உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம். உன் பாதத்தில் கண்ட காட்சியினால் நீயே ஸர்வ ப்ரபஞ்ச ஸ்வரூபிணீ என அறிந்தேன். மது கைடபரிடமிருந்து எங்களை காப்பாற்றியது நீயல்லவா? உன்னுடைய இருப்பிடமான மணித்வீபத்திற்கு வந்ததும் எங்களுக்கு ஏற்பட்ட பரமானந்தத்தை எப்படிப்பட்டது என்று சொல்ல முடியாது. அது எல்லையில்லாத ஓர் ஆனந்தம். உன்னுடைய தரிசனம் மஹாப்பெருமை உடையது. நாங்கள் தான் மும்மூர்த்திகள் என நினைத்திருந்தோம். ஆனால் உன் நகத்திலே மும்மூர்த்திகளைப் பார்த்தோமே! அவர்கள் வேறு நாங்கள் வேறா? எல்லாம் ஒன்றா? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே? இதை எப்படித் தெரிந்து கொள்வது? புத்திமான்களிடம் நீயே புத்தியாகவும், சக்திமான்களிடம் நீயே சக்தியாகவும் இருக்கிறாய். வைராக்யம், செல்வம், கீர்த்தி, அழகு, சந்தோஷம் அனைத்துமே நீயாக இருக்கிறாய். இவைகள் அனைத்தையும் தருபவளும் நீதான். நீ மஹாவித்யா ஸ்வரூபிணீ. உன் பாதங்களில் நான் நமஸ்கரிக்கிறேன். சர்வ மங்களத்தையும் தரக்கூடிய மங்கள ரூபிணியே! உன்னை சரணாகதி அடைகிறேன் எனக்கு அகண்டஞானத்தைத் தருவாயாக! என்று தேவியை வணங்கினார்.


 அடுத்து ருத்ரன் துதிக்கிறார். ஹே! சிவே! உன்னுடைய மூன்று குணங்களே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் மூன்றிற்கும் காரணம். உன்னால் உண்டாக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் நாங்களா காரணம்? ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும் உன் சக்தியே! விமானத்தில் நாங்கள் கண்ட உலகங்களை நாங்களா படைத்தோம்? பவானி! நீயே சொல்! எங்களைப் பெண்ணாக மாற்றியதால் அல்லவா உன் பெருமைகளை நாங்கள் அறிந்தோம்? ஜனன பந்தத்தை நிவர்த்தி செய்யும் உன் பாத தரிசனம் கிடைக்கப் பெற்றோம். யாகம் செய்வதாலோ, தவம் செய்வதாலோ, சமாதி நிஷ்டைகளினாலோ ஒருவன் முக்தி அடைய முடியாது. ஆனால் உன் பாதத்தை அலம்பிய நீரை உட்கொள்பவனுக்கு நிச்சயம் முக்தி கிடைக்கும். அதனால் உனக்கு என்னிடம் கொஞ்சமாவது கருணை இருந்தால் நவாக்ஷரமந்திரத்தை எனக்கு உபதேசம் செய். என்னைக் கரையேற்றுவாய் என வேண்ட அன்னையும் உபதேசம் செய்தாள். ருத்ரரும் காமத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அந்த நவாக்ஷரி மந்திரதை பீஜாக்ஷரத்துடன் பேரானந்தத்துடன் ஜபிக்க ஆரம்பித்தார்.

    




 
அடுத்து ப்ரம்மன் துதிக்கிறார். ஹே அம்ப! நான்கு பிரிவினை உடைய ஸர்வ ப்ரபஞ்சத்தையும் உன் கடைக்கண் பார்வையில் உண்டாக்கும் சக்தி கொண்டவள் நீ! என்னிடம் எதற்குப் படைக்கும் தொழிலைத் தரவேண்டும்? உனக்கு சாமர்த்யம் இல்லையா? மது கைடபர்கள் யுத்தத்தில் விஷ்ணுவால் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்ததா? அல்லது ருத்ரரால் கொல்ல முடிந்ததா? நீதானே எங்களக் காத்து அவர்களைக் கொன்றாய். நீ ஜனனம் மரணம் இல்லாத ஆதி என்பது உண்மைதான். ஆனால் தனக்கு மேல் ஒரு கடவுள் இல்லாதவராகவும் நித்யானந்தராகவும் இருக்கும் பரமசிவன் உன் லீலா வினோதங்களை ஆனந்தமாக பார்க்கிறார் என்று மெய்ஞானிகள் கூறுகிறார்கள். மாயா ஸ்வரூபிணியான நீயும் மாயாதீதரான பரமசிவனையும் தவிர மூன்றாவதாக யாரும் இல்லை என்பதே உண்மை. ஆனால் இது வேத வாக்யத்தைப் பொய் ஆக்குகிறதோ என்ற சந்தேகம் வருகிறது. வேதம் பரமசிவமானது "ஏகமேவாத்விதீயம்" என்று சொல்கிறது. ப்ரம்மம் ஒன்றுதான் என்று சொல்கிறது. அப்படியானால் அது நீயா? பரமசிவமாநீ ஆணா? பெண்ணா? அப்பொழுது அன்னை சொல்கிறாள்" நீங்கள் உள்ளே வரும் போது என்னை தேவீ என்ற உணர்வோடு வந்ததால் என்னை சக்தியாகப் பார்க்கிறீர்கள். என்னை சிவன் என்ற உணர்வோடு வந்திருந்தால் சிவனாகப் பார்த்திருப்பீகள். இந்த உண்மையை உங்களுக்கு உணர்த்தவே இந்த நாடகம். சிவனும் சக்தியும் ஒன்றேஎன்று சொன்னாள். உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் காலத்தில் ப்ரம்மா அன்னையின் ஆணைப்படி ஆணாகவோ பெண்ணாகவோ படைக்கிறார். ஸ்ருஷ்டியில் பேதம் இருக்கிறது. ஆனால் இறுதியில் லயம் அடையும் போது ஆண் பெண் என்ற வித்யாசம் இல்லை. அனைத்தும் ஒன்றே. இறந்த பின் செய்யும் சிரார்தங்களில் கூட ஆண் பெண் இருவருக்கும் மந்திரங்கள் ஒன்றே. அறியாமையே பேதத்திற்குக் காரணம்.


3. நுதிப்ரஸன்னா, நிஜஸர்க சக்திம்

  மஹாஸரஸ்வத்ய பிதாமஜாய

  (ரக்ஷார்த்த சக்திம்- ஹரயே மஹால-

  -க்ஷ்ம்யாக்யாம் லீலா,நிரதே! ததாத)

      ப்ரம்மாவிற்கு ஸ்ருஷ்டிக்கும் சக்தியை அன்னை தருகிறாள். அந்த ஸ்ருஷ்டி சக்தியின் பெயர் ஸரஸ்வதி. அவள் ரஜோ குணம் உடையவள். இவளை உன் மனைவியாகக் கொண்டு, உற்பத்திக்குக் காரணமான உத்பீஜம், அங்கஜம், ஏகஜம், சராயுஜம் ஆகிய நான்கு வகை பீஜங்களைத் தந்து. சத்யலோகம் சென்று, கால, கன்ம (கர்மம்,) சுபாவங்களுக்கு ஏற்ப ஸ்ருஷ்டியைத் தொடங்கு (நம்முடைய அடுத்த ஜன்மத்தை நாம் தான் நிச்சயிக்கிறோம் என்பது இதில் தெரிகிறது). உன்னுடைய ஸ்ருஷ்டிக்குத் தடங்கல் வரும் போது ஹரி அவதரிப்பார். உனக்கு உதவி செய்வார் என்று சொன்னாள். மஹாவிஷ்ணுவிற்கு ஸர்வ சம்பத்தையும் தருகின்ற மஹாலக்ஷிமியைத் தந்தாள். இவள் எப்போதும் உன் மார்பில் வீற்றிருப்பாள். மங்கள ஸ்வரூபிணீ. அனைவராலும் வணங்கக்கூடிய பெருமை கொண்டவள். அனைவரும் என்னிடமிருந்து தோன்றியவர்கள். அதனால் ஹரியும் சிவனும், ஒன்றே. இதை பேதப் படுத்துபவர்கள் நரகத்திற்குச் செல்வர் என்று சொன்னாள். இந்த விஷ்ணு சத்வகுணம் மேலோங்கியவராக பரமார்த்த சிந்தனையுடன் இருப்பார் என்று சொல்லி பீஜாக்ஷரத்தோடு நவாக்ஷரமந்திரத்தை ஜபியுங்கள். இது உங்களுக்கு சர்வ காரிய சித்தியையும் கொடுக்கும். என் முக்குணத்திலிருந்து தோன்றிய நீங்கள் எல்லோராலும் பூஜிக்கத் தக்க கடவுள் ஆவீர்கள் என்று சொன்னாள்.

4. கௌரீம் மஹாகாள்ய, பிதாம் தத்வா

  ஸம்ஹார சக்திம் கிரிசாய மாதஹ                          

  நவாக்ஷரம் மந்த்ர, முதீரயந்தீ

  பத்தாஞ்சலிம் ஸ்தான், ஸ்மித பூர்வமாத்த

      மஹாகாளிகௌரி என்னும் சக்தியை சிவனுக்குக் கொடுத்து, கைலாயம் சென்று அவளுடன் இருப்பாயாக! ரஜஸ், ஸத்வ குணங்கள் உம்மிடம் இருந்தாலும் நீர் தமோ குணம் மேலிட்டவராகவே இருப்பீர். ஸ்ருங்கார லீலைகளில் ரஜோகுணமும், அசுர வதத்தில் தமோ குணமும், தபஸ் செய்கையில் ஸத்வ குணமும் கொள்ளல் வேண்டும். உன்னிடம்  ஸகுணையாகவும்நிர்குணையாகவும் நான் இருப்பேன். ஆனால் நான் எதற்கும் காரணமாக மாட்டேன். உங்களுக்கு ஏதேனும் இடையூறு வரும் காலத்தில், நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் வருவேன். ஆதி புருஷரையும் என்னையும் நினைத்தால் காரியம் சித்தியாகும் என்று சொல்லி மறைந்தாள். மது கைடபர் வதத்தில் விஷ்ணுவிற்கு சக்தி தந்தது மஹாகாளிதான். அது தமோகுண சக்தியான புவனேஸ்வரி அவதாரம். ஆனால் இப்பொழுது சிவனுக்கு கொடுத்திருக்கும் மஹாகாளிகௌரி புவனேஸ்வரியின் அம்சம். அம்சத்தில் அவதாரத்தை விடசக்தி குறைவுதான்.

 

5. ப்ரஹ்மன் ஹரே ருத்ர மதீயசக்தி

  த்ரயேண தத்தேன, ஸுகம் பவந்தஹ

  ப்ரமாண்ட ஸர்க, ஸ்திதி ஸம்ஹ்ருதீச்ச

  குர்வந்து மே சா,ஸநயா விநீதா

      ப்ரம்மாவிற்கு உற்பத்தி, விஷ்ணுவிற்கு காத்தல், ருத்ரனுக்கு அழித்தல் ஆகிய தொழில்களைத் தந்தாள். இவர்கள் அன்னையின் கட்டளைகளைச் செய்பவர்களே அன்றி சுதந்தரமானவர்கள் அல்லர். தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. அனைத்தும் அன்னையின் சக்தியே. நம்முடைய கண், காது, வாய், மூக்கு போன்ற எதுவும் அதனதன் வேலைகளைச் செய்ய சக்தி வேண்டும். தேவியின் அருள் வேண்டும். இல்லை என்றால் எதுவும் இயங்காது.


=======

6. மான்யா பவத்பி: கலு சக்தயோ மே

  ஸ்யாத் சக்திஹீனம், ஸகலம் வினிந்த்யம்

  ஸ்மரேத மாம் ஸந்,ததம் ஏவமுக்த்வா

  ப்ரஸ்தாபயாமா,ஸித தாம்ஸ்த்ரீ மூர்த்தீன்

      இப்படி மும் மூர்த்திகளுக்கும். சக்தியையும் கொடுத்து, அவர்களை ஆதரவுடன் நடத்த வேண்டும் என்றும் சொன்னாள். பெண்ணிற்கு மரியாதையும் அணுசரணையும் ஆதரவும் கிடைக்காவிட்டால் அந்த குடுபம் விளங்காது. சக்தியும் அங்கிருந்து போய்விடுவாள். மீதமிருப்பது வெறும் ஜடம் தான். பார்வை இல்லாத கண்ணால் என்ன பயன்? கணவனும் மனையும் இணைந்து செயல்பட்டால் குடும்பம் க்ஷேமமடையும். மனைவியே கணவனின் ஜீவநாடி. அவள் இல்லையென்றால் அவனின் பாதி சக்தி போயிற்று. சக்தியால் தானே செயல்பட முடியும். ஆனால் சிவனால் முடியாது. என்னை மறந்தால் நான் உங்களைவிட்டுச் சென்று விடுவேன் என்றும் அன்னை கூறுகிறாள்.

 

7. நத்வா த்ரயஸ்தே, பவதீம் நிவ்ருத்தாஹா

  பும்ஸ்த்வம் கதா ,ருருஹுர் விமானம்

  ஸத்யஸ்திரோதா:, ஸுதாஸமுத்ரோ

  த்வீபோ விமானச்ச, திரோபபூவூ

      மும் மூர்த்திகள் மூவரும் அவரவர் சக்திகளுடன் தேவியை நமஸ்கரித்துவிட்டு, கோபுர வாசலை விட்டு வெளியே வந்ததும், அவர்கள் மீண்டும் முன்போல் ஆண்களாக மாறினார்கள். மீண்டும் விமானத்தில் ஏறி வந்து கொண்டிருந்த போது, தேவியும், மணித்வீபமும், சமுத்திரமும், விமானமும் அனைத்தும் மறைந்து போனது. இது என்ன அதிசயம் என நினைத்த போது, அவர்கள் முன்பு மது கைடபர்களுடன் எங்கு யுத்தம் செய்தார்களோ, அதே இடத்தில் நின்று கொண்டிருந்தனர்.

 

8. ஏகார்ரணவே பங்,கஜ ஸன்னிதௌச

  ஹதாஸுரே தே, கலு தஸ்திவாம்ஸ:

  த்ருஷ்டம்னு ஸத்யம்? கிமு புத்திமோஹஹ?

  ஸ்வப்னோ நு கிம்வே,தி வ்யஜாநன்

            நாம் விமானத்தில் சென்றது பொய்யா? நிஜமா? என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இன்னதென்று வருணிக்க முடியாததும்,  அடைய முடியாததும்,  எல்லையற்ற மகிமையுடன் கூடிய மஹாமாயா உருவினளாகி இந்த உலகம்  முழுவதையும் தேவி திகைக்க வைக்கிறாள்

 

9. ததஸ்த்ரயஸ்தே, கலு ஸத்யலோக                          

  வைகுண்ட கைலாஸ, க்ருதாதிவாஸாஹா

  ப்ரமாண்ட ஸ்ருஷ்ட்யா,திஷு தத்தசித்தாஹா

  ஸ்த்வாம் ஸர்வ,சக்தாம் அப ஜந்த தேவி

      மும்மூர்த்திகள் மூவரும் அவரவர் இடமான சத்யலோகம், விஷ்ணுலோகம், கைலாயம் சென்று, அன்னை நம்முடன் இருக்கிறாள் நமக்கு உதவி செய்வாள் என்று, அவரவர் தொழிலைச் செய்யத் துவங்கினர்.

 

10.ஸுதாஸமுத்ரம் தரளோற்,மிமாலம்

  ஸ்தானம் மணித்வீப, மனோபமம்தே

  மஞ்சே நிஷண்ணாம், பவதீம் சித்தே

  பச்யானி தே, தேவி நம: ப்ரஸித

      மும்மூர்த்திகள் தேவியைப் பார்த்தது கனவா? நினைவா? யாருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. ஆனால் எதைச் செய்யவும் தேவியின் அனுக்ரஹம் வேண்டும். அதற்கு அந்த தேவியை நாம் உபாசிக்க வேண்டும். அப்போது நம் மனக் கண்ணில் அன்னை தெரிவாள்.


No comments: