தசகம் 3
மஹகாளி அவதாரம்
1. ஜகத்ஸு ஸர்வேஷு புரா விலீனேஷு
ஷ்வேகார்ணவே சேஷதனௌ ப்ரஸுப்தே
ஹரௌ, ஸுராரீ மதுகைட பாக்யௌ
மஹாபலாவப்ஸு விஜஹ்ரதுர் த்வௌ
முன்பு ஒரு காலத்தில் ப்ரளயம் ஏற்பட மூன்று உலகமும் ஸமுத்திரத்தில் மூழ்கின. அப்பொழுது வாசுதேவன் ஆதிசேஷன் மடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் காதிலுள்ள அழுக்கிலிருந்து மஹா பலசாலியான மது, கைடபன் என்னும் இரு தைத்யர்கள் தோன்றினர். அவர்கள் அந்தக் கடலில் திளைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
2.ஸமா: ஸஹஸ்ரம் யதசித்தவ்ருத்தீ
வாக்பீஜமந்த்ரம் வரதே! ஜபந்தௌ
ப்ரஸாதிதாயா அஸுரௌ பவத்யாஹா
ஸ்வச்சந்தம் ருத்யுத்வம் அவாபதுஸ்தௌ
அப்பொழுது அவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது. நாம் விளையாடும் இந்த கடலுக்கு யார் ஆதாரம்? யார் இதைப் படைத்தது? இது எப்படி உண்டானது? நாம் எப்படி உண்டானோம்? நமது தந்தை யார்? இப்படியெல்லாம் யோசித்தனர். அப்பொழுது கைடபன் மதுவிடம் இந்த ப்ரளய ஜலத்தில் நம்மை நிலை பெறச் செய்யும் சக்திதான் இந்த கடலுக்கும் ஆதாரமாக இருக்க வேண்டும் என்றான். மதுவும் அதை ஒத்துக்கொண்டான். அப்பொழுது ஆகாஸத்தில் அழகிய ஒளியுடன் வாக்பீஜ அக்ஷர ஒலியும் கேட்டது. இது வெறும் அக்ஷரமல்ல. இதில் ஏதோ சக்தி இருக்கிறது என்று நினைத்து அந்த சக்தியை நினைத்து 1000 வருடம் தவம் செய்தனர். தவத்தை மெச்சிய அன்னை அவர்கள் முன் தோன்றினாள். அவர்கள் வேண்டியபடி "தேவர்களாலோ அஸுரர்களாலோ வெற்றி கொள்ள முடியாதவர்களாகவும், தாங்கள் விரும்பினால் மட்டுமே மரணம் உண்டாகும்" என்ற வரத்தினையும் பெற்றனர்.
2. ஏகாம்புதௌ தௌ தரளோர்மிமாலே
நிமஜ்ஜனோன்மஜ்ஜன- கேளிலோலௌ
யத்ருச்சயா வீக்ஷிதம் அப்ஜயோனிம்
ரணோத்ஸுகாவூ,சதுரித்தகர்வௌ
வரத்தினைப் பெற்ற அசுரர்கள் தனக்கு நிகரான வல்லவர்கள் யாரும் இல்லை என்ற மமதையுடன் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று ஒரு நாள் தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் ப்ரம்மனைப் பார்த்தனர். நான்கு தலை உடைய அவரைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்.
4. பத்மாஸனம் வீரவரோபபோக்யம்
ந பீருபோக்யம், ந வராகபோக்யம்
முஞ்சேத மத்யைவ; ந யாஸி சேத் த்வம்
ப்ரதர்ச,ய ஸ்வம் யுதி சௌர்யவத்வம்
தன் வலிமையில் கர்வம் கொண்டு வேறு யாரும் யுத்தம் செய்ய இல்லாத காரணத்தால், வலுக்கட்டாயமாக ப்ரம்மனை எங்களுடன் யுத்தம் செய். இல்லாவிட்டால் தாமரை மலரை விட்டு ஓடிப்போ. யுத்தம் செய்ய வலிமை இல்லாத உனக்குத் தாமரை ஆசனம் எதற்கு? இந்த ஆசனம் வீரர்களுக்கு உகந்தது. நீ உடனே ஓடிப்போய் விடு என்று அச்சுறுத்தினர். இதைக் கேட்டு ப்ரம்மா பயந்து நடுங்கினார்.
5. இதம் ஸமாகர்ண்ய பயாத் விரிஞ்சஹ
ஸுஷுப்தி நிஷ்பந்தம் அமோகசக்திம்
ப்ரபோதனார்த்தம் ஹரிமித்தபக்த்யா
துஷ்டாவ; நைவாசலதம்பு ஜாக்ஷஹ
பயந்து போன ப்ரம்மா, இந்த அஸுரர்களுடன் சண்டை போடுவது நம்மால் முடியாத காரியம். எனவே நம்மைக் காப்பாற்றிக் கொள்ள தூங்கும் விஷ்ணுவை எழுப்புவதே ஒரே வழி. நம்மைக் காப்பாற்ற அவரால் தான் முடியும் என்று தாமரைத் தண்டினுள் சென்று விஷ்ணுவை "நாராயணா" " கோவிந்தா" "மதுசூதனா" "ஆபத்பாந்தவா" " அனாதரட்ஷகா" என்று பலவித நாமங்களால் அழைத்தார்.
6. அஸ்பந்ததா த்வஸ்ய கயாபி சக்த்யா
க்ருதேதி மத்வா மதிமான் விரிஞ்சஹ
ப்ரபோதயைனம் ஹரி மேவமுக்த்வா
ஸ்தோத்ரைர் விசித்ரைர் பவதீமனௌஷீது
எவ்வளவு அழைத்தும் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்? அவரை அப்படி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தியது நித்ராசக்தி அல்லவா? அவர் இப்பொழுது நித்ரா சக்தியின் வசத்தில் இருக்கிறார். அதனால்தான் நான் அழைத்தும் எழுந்திருக்க முடியவில்லை என்று யோசித்து அந்த ஆதிசக்தியான மஹாமாயாவைச் சரணடைகிறார். "தாயே! உன்னைப் பணிந்தேன். நான் ஆபத்தில் இருக்கின்றேன். என்னைக் காப்பாற்று. நீ என்னைக் காப்பாற்ற நினைத்தால் இந்த விஷ்ணுவை எழுப்பு. இல்லையேல் என்னையோ அல்லது அஸுரர்களையோ கொன்று விடு. என்னைக் காப்பாற்ற நினைத்தால் ஏன் இந்த அஸுரர்களைப் படைத்தாய்? என்னைக் காப்பது உன் கையில் தான் இருக்கிறது” என்று வேண்டினார்.
7. நுதிப்ரஸன்னா ப்ஜபவஸ்ய தூர்ணம்
நி: ஸ்ருத்ய விஷ்ணோ: ஸகலாம் கதஸ்வம்
திவி ஸ்திதா; தத்க்ஷணமேவ தேவோ
நித்ராவிமுக்தோ ஹரிருத்திதோ பூது
அப்பொழுது விஷ்ணுவின் உடலிலிருந்து அம்பிகையின் அருளால் ஒளிமயமான தாமஸ ரூபமான சக்தி வெளிப்பட்டது. ஆகாசத்தில் சுந்தரி ஆக, தமோகுண தேவியாக காளி அவதரித்தாள். அந்த சக்தி வெளி வந்ததும் விஷ்ணு தன் உடலை லேசாக அசைத்தார். ப்ரம்மன் ஆனந்தம் அடைந்தார்.
8. அதைஷ பீதம் மதுகைட பாப்யாம்
விரிஞ்சமாலோக்ய ஹரிர் ஜகாத
அலம்பயேனா, ஹமிமௌ ஸுராரீ
ஹந்தாஸ்மி சீக்ரம் ஸமரே த்ர பச்ய
கண் விழித்த விஷ்ணு "ப்ரம்மனே! நீ ஏன் இங்கு தாமரை மலரை விட்டு வந்தாய்? ஏன் பயப்படுகிறாய்? ஏன் துக்கம்? என்று கேட்க ப்ரம்மனும் நடந்தவை அனைத்தையும் கூறுகிறார் என்னைக் காத்தருள வேண்டும் என வேண்டினார். விஷ்ணுவும் கவலை வேண்டாம் நான் அவர்களை ஒரு நிமிடத்தில் அழித்து விடுகிறேன் என்று சமாதானம் கூறினார்.
9. ஏவம் ஹரௌ வக்தரி தத்ர தைத்யௌ
ரணோத்ஸுகௌ ப்ராபது ரித்தகர்வௌ
தயோர விஞ்ஞாய பலம் முராரீர்
யுத்யோத்யதோSபூதஜ ரக்ஷணார்த்தம்
அப்போது ப்ரம்மாவைத் தேடி மது கைடபர்கள் அங்கு வந்தார்கள். ப்ரம்மாவைப் பார்த்து இந்த தூங்கு முஞ்சியுடன் சேர்ந்தாயா? எங்களுடன் சண்டைக்கு வா. உங்கள் இருவரையும் என்ன செய்கிறேன் பார் என்று அறைகூவல் விடுத்தனர். இதைக் கேட்ட ஜனார்த்தனன் என்னுடன் சண்டை போடு. உங்கள் கர்வத்தை அடக்குகிறேன் என்றார். ப்ரளய ஜலத்தில் ஆதாரமில்லாமல் நிற்கும் மதுகைடபர்களுடன் பிறகு சண்டையைத் துவங்கினார்.
10. பிமேமி ராகாதிமஹாரிபுப்யோ
ஜேதும் யதிஷ்யேஹமிமான் ஸுசக்தான்;
ததர்த்தசக்திம் மம தேஹி நித்யம்;
நித்ராலஸோ மா ச பவானி மாதஹ
விஷ்ணு எதிரியை அழிக்க யுத்தம் செய்யப் புறப்பட்டார். ஆனால் வாழ்க்கையில் நாம் தினமும் சந்திக்கும் எதிரிகள் காமம், க்ரோதம், லோபம், மதம், ஆச்சர்யம் ஆகியவைகள். இவைகள் மிகப் பெரிய எதிரிகள். இவைகள் மிகவும் ஆபத்தானவை. இவைகளே மனிதனை மீண்டும் மீண்டும் பிறப்புச் சூழலில் சிக்க வைக்கின்றன. இவைகளைப் பணிய வைக்க பக்தி தான் சிறந்த சாதனை. எந்த காரியத்தைச் செய்தாலும் அது பூர்த்தி அடைய அன்னையின் அனுக்ரஹம் வேண்டும்.
தாயே! அப்படிப்பட்ட அனுக்ரஹத்தை எனக்குத் தா என ஆசிரியர் நாரயண நம்பூதிரி வேண்டினார்.
மூன்றாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment