ENQUIRY geetanjaliglobalgurukulam

Tuesday, 30 May 2023

தசகம் 11 ப்ரம்ம நாரதஸம்வாதம்

 

தசகம் 11

ப்ரம்ம நாரதஸம்வாதம்

ப்ரம்ம நாரதஸம்வாதம்

 

1. ஸ்ரீநாரத: பத்மஜமே,கதாஹா

  பிதஸ்த்வ்யா, ஸ்ருஷ்ட,மிதம் ஜகத் கிம்?

  கிம் விஷ்ணுநா வா, கிரிசேன வா கிம்?

  அகர்த்ருகம் வா, ஸகலேச்வர: கஹ?

       ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரும் அவரவர் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஒருநாள்  நாரதர் சத்யலோகம் வருகிறார். அவர் ப்ரம்மாவிடம் கேட்கிறார் "இந்த உலகம் எப்படி உண்டானது? இதற்கு யார் காரணம்? இந்த கேள்வியை இதற்கு முன் பலரிடம் கேட்டிருக்கிறேன். சிலர் சிவன் என்றும், சிலர், விஷ்ணு என்றும், சிலர் சக்தி என்றும், சிலர் ப்ரக்ருதியில் வரும் மார்க்கம் தான் ஜகத் என்றும் சொல்கின்றனர். கர்த்தா இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது. எனவே நிச்சயம் யாராவது ஒருவர் இதை உண்டாக்கி இருக்க வேண்டும். அது யார்?" என்று கேட்கிறார்.

 

2. இதீரிதோஜ:, ஸுதமாஹ, ஸாது

  ப்ருஷ்டம் த்வயா, நாரத மாம் ஸ்ருணு த்வம்

  விபாதி தேவீ, கலு ஸர்வசக்தி-

  -ஸ்வரூபிணீ; ஸா, புவனஸ்ய ஹேதுஹு

       ப்ரம்மா நாரதரின் இந்தக் கேள்வியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அவர் சொன்னார் சர்வ சக்தி ஆகிய தேவியே இதற்குக் காரண கர்த்தா என்று சொன்னார்.

 

3. ஏகம் பரம் ப்ரம்ம, ஸத த்விதீயம்

  ஆத்மேதி வேதாந்த,வசோபிருக்தா

  ஸா புமான் ஸ்தரீ, ; நிற்குணா ஸா

  ஸ்த்ரீத்வம் பும்ஸ்த்வம், குணைர் ததாதி

       வேதாந்த வாக்யங்கள் ப்ரம்மம், பரமாத்மா என்பது ஒன்றுதான். அது இரண்டல்ல. அந்த ப்ரம்மம் தேவிதான். அந்த தேவி பெண்ணுமில்லை, ஆணுமில்லை. ஆனால் குணங்களால் பெண்ணாகவும் ஆணாகவும் இருக்கிறாள். அவள் நடத்தும் நாடகத்திற்கு ஏற்ப மாறுகின்றாள். யுத்தம் என்று வந்தால் ஆண் போல் சண்டை செய்கிறாள். அதே நேரம் பக்தர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்றால் ஒரு தாய் போல் பெண்ணாகிறாள்.

 

4. ஸர்வம் ததாவாஸ்யமிதம் ஜகத்;,

  ஸா-ஜாதா ஸர்வம், தத ஏவ ஜாதம்;

  தத்ரைவ ஸர்வம், பவேத் ப்ரலீனம்

  ஸைவாகிலம் நாஸ்தி, கிஞ்சநாந்யது

       இந்த உலகம் முழுவதும் தேவியால் தான் உண்டாக்கப் பட்டது. உபநிஷத்துக்களும் இதைத் தான் சொல்கின்றன. உதாரணமாக கடலில் அலைகளும், நீர்க்குமிழிகளும், நுரைகளும் எப்படி உண்டாகிறது? கடல் என்ற உற்பத்தி ஸ்தானம் இருப்ததால் தானே? இந்த அலைகளும், நீர்க்குமிழிகளும், நுரைகளும் அடங்கிய பின் எங்கு செல்கிறது? மீண்டும் கடலில் தானே. அதைபோலவே அனைத்தும் அன்னையிடமிருந்து உண்டாகி அவளிடமே லயமடைகிறது.

 

5. கௌணானி சா,அந்த: கரேந்த்ரியாணி

  ஸா நிற்குணா வாங்,மதிகோசரா

  ஸா ஸ்தோத்ர மந்த்ரை:, சகுணா மஹத்பிஹி

  ஸம் ஸ்தூயதே, பக்த, விபன்னிஹந்த்ரீ

       ஸகுணையும் அவள்தான். நிர்குணையும் அவள்தான். ஸகுணை என்றால் எப்படி இருப்பாள் என்று வார்த்தையால் வருணிக்க முடியும். மனதால் சங்கல்பமும் செய்யலாம். ஆனால் நிர்குணையை வருணிக்க முடியாது. மனதால் சங்கல்பம் செய்யவோ புத்தியால் ஊகிக்கவோ முடியாது. புத்தியும் மனமும் குணமயமானது. முக் குணங்களால் சூழப்பட்ட மனதால் நிர்குண ப்ரம்மத்தை எவ்வாறு அறிய முடியும்? குணங்கள் அஹங்காரத்தினின்றும் தோன்றியவை. பரமாத்மா அஹங்காரத்திற்கு அப்பாற்பட்டவர். பித்த நீரால் வ்யாபிக்கப் பட்ட நாவினை உடையவன் உறைப்பு, இனிப்புச் சுவைகளை அறியமுடியுமா? சித்தத்தில் அஹங்கார நிவர்த்தி உண்டானால் தான் பரமாத்மாவை தரிசிக்க முடியும். அதனால் ஸகுணையும் நிர்குணையும் ஆன அன்னையை குணமயமான மனதாலோ அல்லது புத்தியாலோ அறியமுடியாது. எனவே நீ ஸகுண பரமாத்மாவை ஸ்தோத்ரம் செய் என்றார் ப்ரம்மா. நாம் சொல்லும் ஸ்தோத்ரங்கள் எல்லாம் ஸகுணையான அன்னைக்கே. நிர்குணையை வார்த்தைகளால் ஸ்தோத்ரம் செய்ய முடியாது.

 

6. ஸுதா ஸமுத்ரே, வஸதீயமார்யா

  த்வீபே விசித்ராத்-பூதசக்தி யுக்தா;

  ஸர்வம் ஜகத் யத்,வசகம்; வயம்

  த்ரிமூர்த்தயோ நாம, யதாச்ரிதா: ஸ்மஹ

       நிர்குணையான தேவி எங்கும் எதிலும் நிறைந்திருப்பாள். ஆனால் ஸகுணையான தேவி தூய்மையான இடத்தில் இருப்பாள். சிந்தாமணிக் க்ரஹ்த்தில் உள்ள நான்கு மண்டபங்களில் ஒன்றான ஸ்ருங்கார மண்டபத்தில் சதா பாடிக் கொண்டே இருகின்றாளாம் அன்னை. அதில் இருந்து கொண்டு பக்தர்களுக்குக் கேளிக்கைகளையும், முக்தி மண்டபத்திலிருந்து மோட்க்ஷத்தையும், ஞான மண்டபத்திலிருந்து ஞானோபதேசத்தையும் தருகிறாள், ஏகாந்த மண்டபத்திலிருந்து பூலோகத்தையும் காப்பாற்றுகிறாள். மும் மூர்த்திகளும் இந்த ஏகாந்த மண்டபத்தில் தான் அன்னையை தரிசனம் செய்தனர்.

 

7. தத் தத்தசக்தி, த்ரயமாத்ரபாஜஹ

  த்ரிமூர்த்தய: புத்ர, வயம் வினீதாஹா

  ததாஜ்ஞா ஸாது, ஸதாபி குர்மோ

  ப்ரமாண்ட ஸர்க,ஸ்திதி ஸம்ஹ்ரிதீச்ச

       ப்ரம்மா, நாரதரிடம் மும்மூர்த்திகளாகியத் தாங்கள் விமானம் மூலம் சென்றது, தேவியை ஏகாந்த மண்டபத்தில் தரிசித்தது அனைத்தையும் சொல்கிறார். நாரதருக்கு அனைத்தும் தெரியும். ஆனாலும் ஒன்றும் அறியாதவர் போல் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். நாங்கள் அன்னை இட்ட கட்டளைகளை மட்டுமே செய்யக் கூடியவர்கள். எதையும் தன்னிச்சையாகச் செய்யமுடியாது. நாங்கள் சுதந்தரர் அல்லர் என்று ப்ரம்மா சொல்கிறார்.

 

8. தைவேன மூடம், கவிமாத,னோதி

  ஸா; துர்பலம் து, ப்ரபலம் கரோதி;

  பம்கும் கிரீம் லங்க,யதேச; மூகம்

  க்ருபாவதீ சா, தனுதே ஸுவாசம்

       தேவியின் சிறப்பும், பெருமையும், சக்தியும் ப்ரம்மாவிற்கு நன்கு தெரியும். அன்னையின் நகத்தில் அகில அண்டத்தையும் பார்த்தவர் அவர். மேலும் மதுகைடபர்கள் வதத்தில் அன்னையின் சக்தியை அறிந்து கொண்டவர். தேவி எந்த வேலையையும் அனாயாஸமாக செய்யக் கூடியவள். மூடனைப் பண்டிதன் ஆக்கவும், முடவனை நடக்கச் செய்யவும், ஊமையைப் பேசச் செய்யவும், குருடனைப் பார்க்க வைக்கவும் செய்யக்கூடியவள். பக்தருக்கு எது அசாத்யமோ அதைச் சாத்யமாக்கும் கிருபாவதி தேவி. அன்னையின் க்ருபையை அறிந்து கொள்ள நிறைய கதைகள் இருக்கின்றன.

 

9. யத் கிஞ்சித்,அஞ்ஞாயி மயா மஹத்வம்

  தேவ்யா ஸ்த,துக்தம், தவ ஸம்க்ரஹேண

  ஸர்வத்ர தத், வரணய வஸ்தரேண

  விதத்ஸ்வ பக்திம், ஹ்ருதயே ஜனானாம்

       இந்த உலகத்திற்குக் கர்த்தா யார் என்ற நாரதரின் கேள்விக்கு, ப்ரம்மா தேவிதான் என்ற பதிலைக் கூறினார். இந்த உண்மையை நீ உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று சொன்னார். நாரதர் த்ரிலோக சஞ்சாரி அல்லவா? அவரைவிட வேறு யார் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்?

 

10. இதீரிதோஜேன, முனி : ப்ரஸன்னஹ

   தவ ப்ரபாவம், கருணார்த்ர சித்தே

   வ்யாஸம் ததான் யாம், யதோசிதம்

   ப்ரபோதயா மாஸ, பவித்ரவாக்பிஹி

       இந்த சமயத்தில் தான் வ்யாஸர் தனக்குப் புத்திரன் வேண்டும் என்று தபஸ் செய்ய நினைக்கிறார். யாரை நோக்கி தபஸ் செய்தால் புத்ர பாக்யம் சீக்கிரம் கிடைக்கும் என்று நினைத்துப் புரியாமல் இருக்கும் நேரத்தில், நாரதர் அங்கு சென்று தேவியை நினைத்து தபஸ் செய்யும்படிச் சொல்கிறார். தேவியின் மஹாத்மியத்தைக் கிருஷ்ணனின் தந்தையான வசுதேவருக்குச் சொன்னார். (ஸ்கந்த புராணம்) ஸ்த்ரீயாகவும் புருஷனாகவும் மாறி மாறி ஸுத்யும்னன் நாரதரிடம் நவாக்ஷரீமந்திரம் அறிந்துகொண்டதை முன்பு பார்த்தோம். சீதாதேவியைப் பிரிந்து வருந்தும் ஸ்ரீராமருக்கும் நாரதர் தேவியின் மஹிமையைக் கூறுகிறார். ராமரும் தேவி பூஜை செய்கிறார். இது தேவி பாகவதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. ஜனமேஜயன் செய்த தேவி பூஜையால் பரீக்ஷித்து நற்கதி அடைந்தான்.

 

11. மே குருஸ்த்வச்,சரிதஸ்ய வக்தா;

  மே மதிஸ்த்வத்ஸ் மரணை ஸக்தா;

  வா ச்யவக்தா, கார்ய கர்தா;

  நமாமி மாதச்,சரணா ம்புஜம் தே

       நாரதருக்கு இதைத் தெரிந்து கொள்ள குருவாக ப்ரம்மா இருந்தார். வ்யாஸருக்கு நாரதர் குருவாகக் கிடைத்தார். ஆனால் எனக்கு குருவும் இல்லை. என்னால் தேவியைத் த்யானம் செய்யவும் முடியவில்லை. மனதை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். நல்லதைச் செய்யா விட்டாலும் தீயவைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை. செய்யக்கூடாததைச் செய்கிறேன். பேசக் கூடாததைப் பேசுகிறேன். இவைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற உன் கருணை வேண்டும் என்று இந்த கவி தேவியை நமஸ்கரிக்கிறார்.

பதினொன்றாம் தசகம் முடிந்தது

 

No comments: