https://youtu.be/pKm6sIOIR8M
தசகம் 14 ஸுதர்சனகதை—பரத்வாஜாச்ரமப்ரவேசம்
தசகம் 14
ஸுதர்சனகதை—பரத்வாஜாச்ரமப்ரவேசம்
1. ராஜா புராSSஸீத், கில கோஸலேஷு
தர்மைக,நிஷ்டோ, த்ருவஸந்திநாமா
ஆஸ்தாம் ப்ரியே, அஸ்ய மனோரமா ச
லீலாவதீ சேதி, த்ருடானுரக்தே
கோஸல தேசத்தில் சூர்ய வம்சத்தில் துருவசிந்து என்னும் அரசன் தர்மாத்மாவாகவும், சத்ய சந்தனாகவும், வர்ணாச்ரம தர்மத்தைத் தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் அவரவருடைய தர்மத்தைத் கடைபிடிக்கும்படிச் செய்பபவனாகவும் இருந்து கொண்டு, அயோத்தியை எல்லா வளங்களுடனும் அரசாண்டு வந்தான். கலிங்க நாட்டு அரசனான வீரசேனன் மகளான மனோரமாவையும், உஜ்ஜயினி நாட்டு ராஜாவான யுதாஜித் என்பவரின் மகளான லீலாவதியையும் மணந்து கொண்டு, இரு மனைவியருடனும் எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.
2. மனோரமாSஸூத, ஸுதர்ஷனாக்யம்
குமாரகம், சத்ருஜிதம், ச ஸாந்யா;
ஸம்வர்த்தயம்,ஸ்தௌ, ம்ருகயாவிஹாரீ
வனே ந்ருபோ ஹா!, ஹரிணா ஹதோபூது
சில காலம் இப்படிச் சந்தோஷமாகச் செல்ல, லீலாவதிக்கு சத்ருஜித் என்னும் மகனும், மனோரமாவிற்கு ஸுதர்சனன் என்னும் மகனும் பிறந்தனர். ஒரு நாள் வேட்டை ஆடுவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் கொண்ட துருவசிந்து காட்டிற்கு வேட்டை ஆடச் சென்ற போது, ஒரு கொடிய புலியினால் தாக்கப்பட்டு அதன் நகத்தால் கீறப்பட்டு மரணம் அடைந்தார்.
3. விசிந்தயன், ராஜ,குலஸ்ய வ்ருத்தம்
தஜ்,ஜ்யேஷ்ட புத்ரஸ்ய, ஸுதர்சனஸ்ய
ராஜ்யாபிஷேகாய குருர்,வஸிஷ்டஹ
ச்சகாரமந்த்ரம், ஸசிவை: ஸமேதஹ
துருவசிந்து மரணம் அடைந்ததும் யாருக்குப் பட்டபிஷேகம் செய்வது? ஸுதர்சனனுக்கா அல்லது சத்ருஜித்திற்கா? என்று அனைவரும் யோசிக்கும் பொழுது, குல குருவான வஸிஷ்டரும், மந்திரிகளும் தர்ம பத்தினியான மனோரமாவின் புதல்வன், அரசனுக்குரிய நல்ல சாந்த குணமும், நல்ல ரூபமும் உடையவனாக இருப்பதால் ஸுதர்சனனே பட்டத்திற்கு உரியவன் என நிச்சயித்தனர்.
4. மாதாமஹ: சத்ருஜிதோ யுதாஜிது
அப்யேத்ய ஸத்யோ,Sமிதவீர்யஷாலீ
ராஜ்யே, ஸ்வதௌஹித்ரம்,இஹாபி,ஷிக்தம்
கர்த்தும் குபுத்தி: குருதேஸ்ம யத்நம்
இந்த நேரத்தில் லீலாவதியின் தந்தையான, உஜ்ஜயினிக்கு ராஜாவான யுதாஜித்தும், மனோரமாவின் தந்தையான கலிங்க ராஜாவான வீரசேனனும், தத்தம் பேரன்களுக்குப் பட்டம் கட்ட நினைத்து அங்கு வந்து சேர்ந்தனர். தர்மபத்தினியின் குமாரனாக இருந்தாலும் ஸுதர்சனன் ஒரு அப்பாவி அவனின் சாந்த குணம் அரசாட்சிக்கு ஏற்றதல்ல, அதனால் மூத்தவனான தன் பேரன் சத்ருஜித்திற்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று யுதாஜித் சொல்கிறார்.
5. மனோரமாயா அபி வீரஸேனஹ
பிதாப்யு,பேத்யாSSசு ருரோத தஸ்ய
யத்நம் பலீ; ஸ்வ,ஸ்வஸுதாஸுதாபி-
-ஷேகைக புத்தி, கலு தாவபூதாம்
இதைக் கேட்டவுடன் மனோரமாவின் தந்தை வீரசேனன் எப்படிப் பேசாமல் இருப்பார்? மூத்த மனைவியான, தர்மபத்னியான, என் மகளின் மகனான ஸுதர்சனனே ராஜா ஆகத் தகுதி உள்ளவன் என்று சொல்கிறார்.
6. க்ருத்வா விவாதம் ச, ததோ ந்ருபௌத்வௌ
கோரம் ரணம் சக்ரதுரித்த ரோஷௌ
யுதாஜிதா தத்ர, து வீரஸேனோ
தைவாத் ஹதோபூத், ஹரிணா கரீவ
இருவரும் இதை விவாதித்து, முடிவில் இருவரும் யுத்தத்திற்குத் தயாராகினர். யுத்தத்தில் இரு பக்க வீரர்களும் சண்டையிட்டுப் பலர் மாண்டு போனார்கள். போரின் முடிவில் யுதாஜித்தின் வாளுக்கு வீரசேனன் பலியாகி மரணம் எய்தினான்.
7. ராஜ்யேSபிஷித்த:, கலு சத்ருஜித் ஸஹ
பாலஸ்ததோSயம், ரிபுபித் யுதாஜிது
தௌஹித்ர ராஜ்யம், ஸுகமேகநாதஹ
சசாஸ வஜ்ரீவ, திவம் மஹேசி
வீரசேனன் மரணம் அடைந்ததும் ச்த்ருஜித்திற்குப் பட்டம் கட்டப்படுகிறது. இருந்தாலும் அவன் பாலகன் அல்லவா? அதனால் அவன் பாட்டனாரான யுதாஜித் ராஜ்ய பரிபாலனம் செய்கிறார். கோஸல நாடு சகல சம்பத்துக்களும் நிறைந்து ஒரு சொர்க்கம் போல் இருக்கும் ஒரு ராஜ்யம். அதை ஆள்பவன் இப்பொழுது ஒரு பாலகன். அதனால் யுதாஜித்தைக் கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள்? தன் இஷ்டப்படி ராஜ்யத்தை ஆண்டு வருகிறான் யுதாஜித்.
8. பத்யு: பிதுச் சாபி, ம்ருதேரநாதா
பீதா விதள்ளா,பித மந்த்ரி,யுக்த்தா
மனோராமா பால,ஸுதா த்வரண்யே
யயௌ பரத்வாஜ,முனிம் சரண்யம்
யுதாஜித் தான் நினைத்தை அடைந்தான். கோஸல ராஜ்யத்தை ஆளத் தொடங்கினான். ஆனால் மனோரமாவிற்குக் கவலை வந்துவிட்டது. தன் தந்தையோ யுத்தத்தில் இறந்துவிட்டான். நமக்கு உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. முன்பு நம்மை ஆதரித்த மந்திரிகள் கூட இப்பொழுது யுதாஜித்தை ஆதரிக்கத் தொடங்கி விட்டனர். இவர்களால் தனக்கும் தன் மகனுக்கும் எந்த நேரமும் துன்பம் வரலாம். நமக்கு இந்த கஷ்டம் தெய்வாதீனமாய் வந்துவிட்டது. இதை நினைத்து நினைத்து கவலைப்படுவதில் எந்த உபயோகமும் இல்லை. எப்படியாது தன்னையும் மகனையும் காத்துக் கொள்ள வழி தேட வேண்டும் என்று ஆலோசிக்கிறாள். நம்பிக்கைக்குப் பாத்திரமான விதள்ளன் என்னும் ஒரு மந்திரியை அழைத்து யோசனைக் கேட்கிறாள். அவரின் யோஜைனைப்படி தன் பிதாவின் ராஜ்யத்தைப் பார்க்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு, தன் மகனுடன் காட்டு வழியாகப் போகிறாள். அங்கு சில கள்வர்களால் வழி மறிக்கப் பட்டு, இருந்த சில ஆபரணங்கள் பணம் எல்லாவற்றையும் இழந்து விடுகிறாள். மனம் வருந்தி அழுகிறாள். எப்படியாவது தப்பிக்க வேண்டுமே என்று ஒரு நதிக்கரையில் ஒரு படகைப் பிடித்து கங்கைக் கரையை அடைகிறாள். பின் அங்கிருந்து திரிகூட பர்வதம் அடைந்து பரத்வாஜ ஆஸ்ரமத்தை அடைகிறாள்.
9. தபோநிதிர் தீந,ஜனானு கம்பி
ஞாத்வா முனிஸ்தாம், த்ருவஸந்தி,பத்னீம்
உவாச-வத்ஸே! வச நிர்பயைவ
தபோவனேத்ராஸ்து சுபம் தவேதி
மனோரமா எந்தக் காரியத்தை நினைத்துப் புறப்பட்டாளோ அது நடந்தது. பரத்வாஜர் ஒரு சிறந்த தபஸ்வி. மிகுந்த இரக்க மனம் கொண்டவர். அழுதுகொண்டும், பயத்தினால் மனமும் நடுங்கிக் கொண்டிருக்கும் மனோரமாவிடம், சகல விபரங்களும் அறிந்து கொள்கிறார். "அம்மணீ! கவலையை விட்டு விடும். இங்கு நீங்கள் சுகமாக பாதுகாப்பாக இருக்கலாம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. உன் குமாரன் மீண்டும் அரசனாவான். இதில் சந்தேகம் வேண்டாம். உங்களுக்கு இனி துன்பம் வராது “ என்று ஆசீவதித்தார். விதள்ளன் மிண்டும் ராஜ்யம் திரும்பினார்.
10. அல்போSப்யு,பேக்ஷ்யோ, ந ரிபுர் ந ரோகோபி
ஏவம் ஸ்மன்னாசு, ந்ருபோ யுதாஜிது
தாம் ஹர்துகாம:, ஸஸுதாம் மஹர்ஷேஹே
ப்ராபாSSச்ரமம் மந்த்ரி,வரேண ஸாகம்
ஒருவனுக்கு வியாதி, விரோதி இரண்டும் ஒன்று போலத்தான். வியாதி இருந்தாலும் அல்லது விரோதிகள் இருந்தாலும் உடனே நிவர்த்திக்க வேண்டும். இல்லையென்றால் அது மிகுந்த துன்பத்தைத் தரும். யுதாஜித் மனோரமாவையும் ஸுதர்சனனையும் எதிரிகளாக நினைக்கிறான். சில காலம் சென்று இவர்கள் ராஜ்யத்தை மீண்டும்
அபகரிக்க முயற்சி செய்வார்கள். அதனால் கஷ்டம் வரும்.
அவர்களைக் கொன்று விடுவதே நல்லது என்று முடிவு செய்கிறான். அவர்கள் இருக்கும் இடம் தேடி அலைகிறான். பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் இருப்பதை அறிந்து கொள்கிறான்.
11. ந மாநிதஸ்தேன தபஸ்வினா ஸ
மனோரமாம் நைவ, ஸுதம் ச லேபே;
ப்ரஹர்த்து காமோSபி, முனிம் ஸ மந்த்ரி
வாசா நிவ்ருத்த:,ச்ருத கௌசிகோSபூது
யுதாஜித் வருவதை அறிந்து கொண்ட மனோரமா, யுதாஜித் என்ன செய்வானோ என்று மிகவும் பயப்படுகிறாள். அப்பொழுது அங்கு வந்த யுதாஜித்திடம், யாரும் இங்கு வரவில்லை என்று முனிவர் சொல்கிறார். உண்மையைச் சொல்லாவிட்டால் பலத்காரமாக அவர்களைச் கொண்டு செல்வேன் என்று மிரட்டுகிறான்.
"என்னைச் சரண் அடைந்தவர்களை நான்
உன்னோடு அனுப்பமாட்டேன். முன்பு விசுவாமித்ரர் எப்படிப் பசுவை வஸிஸ்டரிடமிருந்து அபகரித்தாரோ, அப்படி, உனக்குச் சக்தி இருந்தால் அழைத்துக் கொண்டு போ"
என்றார் பரத்வாஜர். யுதாஜித் மந்திரிகளிடம் ஆலோசனைக் கேட்கும் பொழுது அவர்கள் முன்பு விஸ்வாமித்திரர் ராஜாவாக இருந்த பொழுது, வஸிஷ்டரிடம் காமதேனுவை அபகரிக்க முயற்சி செய்து, முடிவில் க்ஷத்ரிய பலத்தை விடத்
தபோ பலம் மிகுந்த சக்தி உடையது என அறிந்து தானும் கடின தவம் செய்து, ப்ரம்ம தேஜோ பலத்தை அடைந்தார். எனவே நாம் இவரை பகைத்துக் கொள்ளலாகாது. பெண்ணான மனோரமாவாலும், பண பலமில்லாத ஸுதர்சனாலும் எந்த ஆபத்தும் வராது என்று சொன்னார்கள். யுதாஜித்தும் தன் கோபம் தணிந்து பரத்வாஜரை வணங்கித் தன் நகரம் போய்ச் சேர்ந்தான்.
12. ஏவம் முனிஸ்தாம், ஸஸுதாம் ரரக்ஷ
பீதோஸ்மி ஸம்ஸார,யுதாஜிதோSஹம்
ந மே ஸஹாயோஸ்தி, விநா த்வயைஷ
ஸ நூபுரம் தே, சரணம் நமாமி
மனோரமாவிற்கும் ஸுதர்சனுக்கும் அபயம் தர பரத்வாஜர் இருந்தார். யுதாஜித் என்கின்ற கொடியவனான ஸம்சார சாகரத்திலிருந்து காப்பாற்றினார். தாயே! நான் இந்த ஸம்சாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு யாரும் இல்லை. நீ மட்டுமே துணை. நான் உன் பாதத்தில் சரணடைகிறேன்.
என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று இந்நூலின் ஆசிரியர் அன்னையை வேண்டிக் கொள்கிறார்.
பதிநான்காம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment