ENQUIRY geetanjaliglobalgurukulam

Tuesday, 30 May 2023

தசகம் 13 உதத்யமஹிமை

 

tamizh story dasakam 13


தசகம் 13

உதத்யமஹிமை

 

1.அதாகத: கச்சித் அதிஜ்ய தன்வா

 முனிம் நிஷாத:, ஸஹஸா ஜகாத

  த்வம் ஸத்யவாக் ப்ரூஹி, முனே த்வயா கிம்

  த்ருஷ்ட: கிடி; ஸா,யகவித்த தேஹஹ?

       அந்தப் பன்றியை வேட்டை ஆடுவதற்காக  வந்த வேடன், தர்பாஸனத்தில் அமர்ந்திருக்கும் ஸத்யவ்ரதனைப் பார்த்து "ஐயா! என் அம்பினால் அடிபட்டு வந்த பன்றி ஒன்று இவ்வழியே வந்ததா? நீங்கள் ஸத்யவ்ரதன் என்பதை நான் அறிவேன். எனவே பொய் கூறாமல் உண்மையைச் சொல்லவேண்டும்" என்று சொன்னான்.

 

2. த்ருஷ்டஸ்த்வயா சேத், வத ஸுகர: க்வ

  கதோ வாத்ருச்,யத கிம் முநீந்த்ர

  அஹம் நிஷாத:, கலு வன்யவ்ருத்திர்

  மமாஸ்தி தாரா,திக போஷ்யவர்கஹ

       மேலும் அந்த வேடன் சொன்னான் "ஐயா! என் குடும்பம் பசியால் வாடிக்கொண்டிருக்கிறது. அவர்களின் பசியைப் போக்கி அவர்களை ரக்ஷிக்கும் கடமை எனக்கு இருக்கிறது. ப்ரம்மன் என்னை வேடனாகத்தான் படைத்திருக்கிறான். எனக்கு வேட்டை யாடுவதைத் தவிர வேறு தொழில் தெரியாது. அது புண்ணியமோ பாபமோ எனக்குத்  தெரியாது என் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் கூறும் அனைத்தும் உண்மையே. ஆகவே தாங்களும் உண்மை கூற வேண்டும்என்று ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனைப் போலப் பேசினான்.

 

3. ச்ருத்வா நிஷாதஸ்ய, வசோ முனி:

  தூஷ்ணீம், ஸ்திதச்சின்,தயதி ஸ்ம காடம்

  வாதாமி கிம் த்ருஷ்ட, இதீர்யதே சேது

  ஹன்யாதயம் தம்; மம சாப்யகம் ஸ்யாது

       பன்றியை பார்த்தீர்களா? அது எங்கே போயிற்று? என்ற வேடனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பேசாமல் இருக்கிறான் உதத்யனன். பன்றி இங்குதான் புதரில் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் வேடன் அதைக் கொல்வான். அது ஹிம்சைக்குத் துணை போன பாபத்தைத் தரும். பன்றியைக் காணவில்லை என்று சொன்னால் அது அசத்யம் ஆகும். ஸத்யவ்ரதன் பொய் சொல்லலாமா? கூடாது. எனவே என்ன பதில் சொல்வது என ஆலோசிக்கிறான்.

 

4. ஸத்யம் நரம் ரக்ஷதி ரக்ஷிதம் சேது

  அஸத்யவக்தா, நரகம் வ்ரஜேச்ச

  ஸத்யம் ஹி ஸத்யம், ஸதயம் கிஞ்சிது

  ஸத்யம் க்ருபாசூன்ய, மிதம் மதம் மே

       பொய் சொல்லக்கூடாது என்பது சரிதான். ஆனால் உண்மை பேசினால் ஒரு உயிர் போகும். அதனால் இந்த உயிர் போகாமல் இருக்கப் பொய் சொல்வதா? அல்லது பொய் பேசக்கூடாது என்பதற்காக உண்மையைச் சொல்வதா? என யோசிக்கிறான். எல்லா சத்யமும் சத்யமாகாது. எதில் கருணை அதாவது க்ருபை இருக்கிறதோ அதுதான் சத்யமாகும் என்ற முடிவிற்கு வருகிறான்.

 

5. ஏவம் முனேச் சின்,தயத: ஸ்வகார்ய-

  -வ்யக்ரோ நிஷாத:, புனரேவ,மூசே

   த்ருஷ்டஸ்த்வயா கிம், கிடிர் கிம் வா

   த்ருஷ்ட: ,சீக்ரம், கதயாத்ர ஸத்யம்

       இப்படி ஸத்யவ்ரதன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது வேடன் பன்றியைக் கண்டீர்களா? இல்லையா? சீக்கிரம் சொல்லுங்கள். இல்லாவிட்டால் பன்றி எங்காவது ஓடிவிடும். என் குடும்பம் பட்டினி ஆகிவிடும். சீக்கிரம் சொல்லுங்கள் என்கிறான்.

 

6. முனிஸ்த,மாஹா த்ர, புன: புன: கிம்

  நிஷாத மாம் ப்ருச்,சஸி மோஹமக்னஹ?

  பச்யன் பாஷேத, நச ப்ருவாணஹ

  பச்யே தலம் வாக்பி; ரவேஹி ஸத்யம்

       தேவியினால் அனுக்ரஹிக்கப் பட்ட ஸத்யவ்ரதன் ஒரு கவிஞனைப் போல் "எவன் பார்க்கின்றானோ அவன் சொல்வதில்லை. எவன் சொல்கிறானோ அவன் பார்ப்பதில்லை" என்றான். கண் பார்த்தாலும் அது பேசுமா? பேசாது. வாய் பேசுகிறது அது பார்க்க முடியுமா? முடியாது. எனவே இது உண்மைதானே. இப்படி அந்தச் சூழ்நிலையைச் சமாளித்தான்.

 

7. உன்மாதினோ ஜல்,பனமேத தேவம்

  மத்வா நிஷாத: ஸஹஸா ஜகாம;

  நாஸத்ய முக்தம், முனினா கோலஹ

  ஹதச்ச சர்வம், தவ தேவி! லீலாஹா

       இவன் என்ன இப்படி பார்ப்பதில்லை, சொல்வதில்லை என்று பயித்தியம் போல் உளறுகிறானே என்று வேடன் நினைக்கிறான். ஆனால் ஸத்யவ்ரதன் சொன்னது ஸத்யம்தான். அவன் பொய்யும் சொல்லவில்லை, பன்றியும் காப்பாற்றப்பட்டது. அது தேவியின் க்ருபை. ஸத்யவ்ரதன் பொய் சொல்லலாமா என்ற கேள்வி வரலாம். வேடனுக்கு வேட்டை ஆடுவது அவன் தொழில். அது அவனுக்கு நியாயமே. பாபமல்ல. ஆனால் அவன் துரத்தி வந்த பன்றியை ஹிம்சைக்குக் காட்டிக் கொடுப்பது நியாயமல்ல. தர்ம நியாயம் என்பது எல்லோருக்கும் ஒன்றல்லஅதற்குச் சில விதி விலக்குகள் இருக்கிறது. அதனால் தான் பன்றியைக் காப்பாற்றினார்.

 

8. த்ரஷ்டா பரம் ப்ரம்ம, ததேவ ஸ்யாது

  இதி ச்ருதி: ப்ராஹ; பாஷதே ஸஹ

  ஸதா ப்ருவாணஸ்து, பச்யதீதம்

  அயம் ஹி ஸத்ய, வ்ரதவாக்ய ஸாரஹ

       உதத்யனன் சொன்னது அந்த நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்கச் சொன்ன பதில் அல்ல. உபநிஷத்துக்களின் தத்வம்.

" யா பஸ்யதி நஸாப்ரூதே யாப்ரூதே ஸா நபஸ்யதி /

அஹோ வ்யாத ஸ்வகார்யார்த்தின் கிம ப்ருச்சஸி புந: புநஹ //

       ப்ரம்மத்தை உணந்தவன் ப்ரம்மமாகிறான். தானே ப்ரம்மம் என்று உணர்ந்தவன் அதிகம் பேசமாட்டான். அதிகம் பேசுபவர்களுக்கு ப்ரம்ம தத்வம் அசாத்யமாகும். அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிப்போம். ஆனால் சொல்லமுடியாது. மௌனமாக இருந்தால் தான் அந்த ஆனந்தம் கிடைக்கும். பேசிக்கொண்டே இருந்தால் த்யானத்தில் மனம் நிலைக்காது. அவன் பக்தனும் ஆகாமாட்டான்.

 

9. பூய: ஸாரஸ்,வத பீஜ மந்த்ரம்

  சிரம் ஜபன் ஞான,நிதி: கவிச்ச

  வால்மீகிவத் ஸர்வ,திசி ப்ரஸித்தஹ

  பபூவ பந்தூன், ஸமதர்பயச்ச

       உதத்யனன் கோபிலரின் சாபத்தால் மூடனாகப் பிறந்தான். அவன் ஞானி ஆவான் என்றும் அவர் அனுக்ரஹித்தார். அது உண்மை ஆயிற்று. அடிபட்ட பன்றியைக் கண்டு பயத்தினால் உதத்யனன் உளறிய வார்த்தைகளைத் தன் பீஜாக்ஷர மந்திரத்தைச் சொன்னதாக நினைத்து அவனை உலகம் போற்றும் கவிஞனாக்கினாள் தேவீ. ஒரு பெரும் கொள்ளைக்காரன் ராம நாமம் சொன்னதால் வால்மீகீ என்னும் கவிஞனாக மாறினான். தேவீ மூடனைக் கவிஞன் ஆக்குவாள். மூடனைப் பேசவைப்பாள். உதத்யனன் கதை இதற்கு ஒரு உதாரணமாகும். அந்த பரதேவதை எல்லோராலும் பூஜிக்கத் தக்கவள். பக்தியுடன்  பூஜித்தால் அன்னை எதுவும் தருவாள்.

 

10. ஸ்ம்ருதா நதா தேவி, ஸுபூஜிதா வா

   ச்ருதா நுதா வா, கலு வந்திதா வா

   ததாஸி நித்யம், ஹிதமா ச்ரிதேப்யஹ

   க்ருபார்த்ர சித்தே, ஸததம் நமஸ்தே

       தேவியை வணங்குவதற்குப் பலவிதமான வழி முறைகள் உள்ளன. தேவியின் நாமத்தைச் சொல்வது, அவளின் கதைகளைக் கேட்பது, தேவியின் பெருமையைப் பாட்டாகப் பாடுவது, கதைகளைப் படிப்பது, த்யானம் செய்வது, பூஜை செய்வது போன்று பல வழிகள் உள்ளன. அதில் ஏதேனும் ஒரு வழியைச் சிரத்தையுடன் செய்தால் அன்னை காட்சி தருவாள்.

 

தசகம் பதிமூன்று முடிந்தது

 

 

 

No comments: